கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி,
கழுக்குன்றம், கண் ஆர் அண்ணா,
மந்தம் ஆம் பொழில் சாரல் வடபர்ப்பதம்,
மகேந்திர மா மலை நீலம், ஏமகூடம்
விந்த மா மலை, வேதம், சையம், மிக்க
வியன் பொதியில் மலை, மேரு, உதயம், அத்தம்,
இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம், இடர் கெட நின்று ஏத்துவோமே.