பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது க்ஷேத்திரக்கோவைத்
வ.எண் பாடல்
1

தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி,
தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்,
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி,
கோவல்-வீரட்டம், கோகரணம், கோடிகாவும்,
முல்லைப் புறவம் முருகன் பூண்டி,
முழையூர், பழையாறை, சத்தி முற்றம்,
கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.

2

ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும்,
ஆக்கூரில்-தான் தோன்றி மாடம், ஆவூர்,
பேரூர், பிரமபுரம், பேராவூரும், பெருந்துறை,
காம்பீலி, பிடவூர், பேணும்
கூர் ஆர் குறுக்கை வீரட்டான(ம்)மும்,
கோட்டூர், குடமூக்கு, கோழம்ப(ம்)மும்,
கார் ஆர் கழுக்குன்றும், கானப்பேரும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.

3

இடை மருது, ஈங்கோய், இராமேச்சுரம்,
இன்னம்பர், ஏர் இடவை, ஏமப்பேறூர்,
சடைமுடி, சாலைக்குடி, தக்க(ள்)ளூர்,
தலையாலங்காடு, தலைச்சங்காடு,
கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர்,
கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு,
கடைமுடி, கானூர், கடம்பந்துறை, கயிலாய
நாதனையே காணல் ஆமே.

4

எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங்கோட்டூர்,
இறையான் சேரி,
அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர்,
ஆவடுதண்துறை, அழுந்தூர், ஆறை,
கச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்கோயில்,
கரவீரம், காட்டுப்பள்ளி,
கச்சிப் பலதளியும், ஏகம்பத்தும், கயிலாய
நாதனையே காணல் ஆமே.

5

கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர்,
கொங்கணம், குன்றியூர், குரக்குக்காவும்,
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்காவும்,
நின்றியூர், நீடூர், நியமநல்லூர்,
இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர்,
எறும்பியூர், ஏர் ஆரும் ஏமகூடம்,
கடம்பை, இளங்கோயில் தன்னிலுள்ளும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.

6

மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர்,
வக்கரை, மந்தாரம், வாரணாசி,
வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி,
விளமர், விராடபுரம், வேட்களத்தும்,
பெண்ணை அருள்-துறை, தண் பெண்ணாகடம்,
பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூரும்,
கண்ணை, களர்க் காறை, கழிப்பாலையும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.

7

வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி,
விசயமங்கை, வியலூர்,
ஆழி அகத்தியான்பள்ளி, அண்ணாமலை,
ஆலங்காடும், அரதைப்பெரும்-
பாழி, பழனம், பனந்தாள், பாதாளம்,
பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், தண்
காழி, கடல் நாகைக்காரோணத்தும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.

8

உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர்,
உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும்,
மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை,
வழுவூர்-வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,
வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகா,
வேதீச்சுரம், வில்வீச்சுரம், வெற்றியூரும்,
கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கையும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.

9

திண்டீச்சுரம், சேய்ஞலூர், செம்பொன் பள்ளி,
தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை,
கொண்டீச்சுரம், கூந்தலூர், கூழையூர், கூடல்,
குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு(வ்),
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்,
ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூரும்,
கண்டியூர் வீரட்டம், கருகாவூரும், கயிலாய
நாதனையே காணல் ஆமே.

10

நறையூரில் சித்தீச்சுரம், நள்ளாறு, நாரையூர்,
நாகேச்சுரம், நல்லூர், நல்ல
துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை,
தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம்,
உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர்,
ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும்,
கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும்,
கயிலாய நாதனையே காணல் ஆமே.

11

புலி வலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம்,
பூவணம், பொய்கை நல்லூர்,
வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி,
வாஞ்சியம், மருகல், வன்னி
நிலம் மலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும்
நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்!
கலி வலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற
கயிலாய நாதனையே காணல் ஆமே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் மூன்று எய்து,
புலந்து அழிய, சலந்தரனைப் பிளந்தான், பொன் சக்-
கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கள் ஆர் கமழ்
கொல்லி அறைப்பள்ளி, கலவம் சாரல்
சிரப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழு
நனிபள்ளி, தவப்பள்ளி, சீர் ஆர்
பரப்பள்ளி, என்று என்று பகர்வோர் எல்லாம்
பரலோகத்து இனிது ஆகப் பாலிப்பாரே.

2

காவிரியின் கரைக் கண்டிவீரட்டானம், கடவூர்
வீரட்டானம், காமரு சீர் அதிகை
மேவிய வீரட்டானம், வழுவை வீரட்டம், வியன்
பறியல் வீரட்டம், விடை ஊர்திக்கு இடம் ஆம்
கோவல் நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம்,
கோத்திட்டைக் குடிவீரட்டானம், இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்,
நமன் தமரும், “சிவன்தமர்!” என்று அகல்வர், நன்கே.

3

நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன்
செம்பங்குடி, நல்லக்குடி, நளி நாட்டியத்தான் குடி,
கற்குடி, தென்களக்குடி, செங்காட்டங்குடி,
கருந்திட்டைக்குடி, கடையக்குடி, காணுங்கால்
விற்குடி, வேள்விக்குடி, நல் வேட்டக்குடி,
வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி,
புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி,
புதுக்குடியும், போற்ற இடர் போகும் அன்றே.

4

பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்,
பெரும்பற்றப் புலியூரும், பேராவூரும்,
நறையூரும், நல்லூரும், நல்லாற்றூரும், நாலூரும்,
சேறூரும், நாரையூரும்,
உறையூரும், ஓத்தூரும், ஊற்றத்தூரும், அளப்பூர்,
ஓமாம்புலியூர், ஒற்றியூரும்,
துறையூரும், துவையூரும், தோழூர்தானும்,
துடையூரும், தொழ இடர்கள் தொடரா அன்றே.

5

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்
கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,
கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்
இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்,
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,
தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.

6

மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும்
மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு;
தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண்
சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு;
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு;
பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க,
விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை
வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே.

7

கடு வாயர் தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்
நுதலோன் நண்ணும் இடம் அண்ணல் வாயில்,
நெடுவாயில், நிறை வயல் சூழ் நெய்தல் வாயில்,
நிகழ் முல்லை வாயிலொடு, ஞாழல் வாயில்,
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில்,
மறிகடல் சூழ் புனவாயில், மாடம் நீடு
குடவாயில், குணவாயில், ஆன எல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே.

8

நாடகம் ஆடி(இ)டம் நந்திகேச்சுரம், மா காளேச்சுரம்,
நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்கு ஆன
கோடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம்,
குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால்
ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம்,
அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அம் தண் கானல்
ஈடு திரை இராமேச்சுரம், என்று என்று ஏத்தி
இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.

9

கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி,
கழுக்குன்றம், கண் ஆர் அண்ணா,
மந்தம் ஆம் பொழில் சாரல் வடபர்ப்பதம்,
மகேந்திர மா மலை நீலம், ஏமகூடம்
விந்த மா மலை, வேதம், சையம், மிக்க
வியன் பொதியில் மலை, மேரு, உதயம், அத்தம்,
இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம், இடர் கெட நின்று ஏத்துவோமே.

10

நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு, நலம்
திகழும் நாலாறும், திரு ஐயாறும்,
தெள்ளாறும்; வளைகுளமும், தளிக்குளமும், நல்
இடைக்குளமும், திருக்குளத்தோடு; அஞ்சைக்களம்,
விள்ளாத நெடுங்களம், வேட்களம்; நெல்லிக்கா,
கோலக்கா, ஆனைக்கா, வியன் கோடி(க்)கா;
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும்,
குளம், களம், கா, என அனைத்தும் கூறுவோமே.

11

கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள்
உரம் நெரியக் கால்விரலால் செற்றோன்
பயில்வு ஆய பராய்த்துறை, தென்பாலைத் துறை, பண்டு
எழுவர் தவத்துறை, வெண்துறை, பைம்பொழில்
குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை,
பெருந்துறையும், குரங்காடு துறையினோடு,
மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, மற்றும்
துறை அனைத்தும் வணங்குவோமே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு, நிலை தளர
ஆயிரம் மா முகத்தினோடு
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயிலக் கண்டு, பட
அரவும் பனி மதியும் வைத்த செல்வர்-
தாம் திருத்தித் தம் மனத்தை ஒருக்காத் தொண்டர்! தனித்து
ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம்
“பூந்துருத்தி பூந்துருத்தி” என்பீர் ஆகில், பொல்லாப்
புலால்-துருத்தி போக்கல் ஆமே.

2

ஐத் தானத்து அக மிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால
யாதொன்றும் இடுவார் இல்லை;
மைத் தானக் கண் மடவார் தங்களோடு மாயம் மனை
வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்!
பைத் தானத்து ஒண்மதியும் பாம்பும் நீரும் படர் சடை
மேல் வைத்து உகந்த பண்பன் மேய
“நெய்த்தானம் நெய்த்தானம்” என்பீர் ஆகில், நிலாவாப்
புலால்-தானம் நீக்கல் ஆமே.

3

பொய் ஆறா ஆறே புனைந்து பேசி, புலர்ந்து எழுந்த
காலைப் பொருளே தேடி,
“கையாறாக் கரணம் உடையோம்” என்று களித்த
மனத்தராய், கருதி வாழ்வீர்!
நெய் ஆறா ஆடிய நீலகண்டர், நிமிர் புன்சடை
நெற்றிக்கண்ணர், மேய
“ஐயாறே ஐயாறே” என்பீர் ஆகில், அல்லல் தீர்ந்து
அமருலகம் ஆளல் ஆமே.

4

இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார்; ஈன்று
எடுத்த தாய் தந்தை பெண்டீர் மக்கள்
கழல் நம் கோவை ஆதல் கண்டும், தேறார்; களித்த
மனத்தராய்க் கருதி வாழ்வீர்!
அழல் நம்மை நீக்குவிக்கும், அரையன் ஆக்கும்,
அமருலகம் ஆள்விக்கும், அம்மான் மேய
“பழனம் பழனமே” என்பீர் ஆகில், பயின்று எழுந்த பழ
வினை நோய் பாற்றல் ஆமே.

5

ஊற்றுத்துறை ஒன்பது உள்-நின்று ஓரீர்; ஒக்க அடைக்கும்
போது உணர மாட்டீர்;
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடாமுன்னம், மாயம் மனை
வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்!
வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ்
அழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
“சோற்றுத்துறை சோற்றுத்துறை” என்பீர் ஆகில், துயர்
நீங்கித் தூ நெறிக்கண் சேரல் ஆமே.

6

கலம் சுழிக்கும் கருங்கடல் சூழ் வையம் தன்னில் கள்ளக்
கடலில் அழுந்தி, வாளா
நலம் சுழியா, எழும் நெஞ்சே! இன்பம் வேண்டில், நம்பன்
தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில்,
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய,
அருமறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில்,
“வலஞ்சுழியே வலஞ்சுழியே” என்பீர் ஆகில், வல்வினைகள்
தீர்ந்து வான் ஆளல் ஆமே.

7

தண்டி, குண்டோதரன், பிங்கிருடி, சார்ந்த புகழ் நந்தி, சங்கு
கன்னன்,
பண்டை உலகம் படைத்தான் தானும், பாரை அளந்தான்,
பல்லாண்டு இசைப்ப;
திண்டி வயிற்றுச் சிறு கண் பூதம்-சில பாட; செங்கண் விடை
ஒன்று ஊர்வான்
“கண்டியூர் கண்டியூர்” என்பீர் ஆகில், கடுக நும்
வல்வினையைக் கழற்றல் ஆமே.

8

விடம், மூக்கப் பாம்பே போல், சிந்தி, நெஞ்சே! வெள்
ஏற்றான் தன் தமரைக் கண்டபோது
வடம் ஊக்க மா முனிவர் போலச் சென்று,
மா தவத்தார் மனத்து உளார், மழுவாள் செல்வர்,
படம் மூக்கப் பாம்பு அணையில் பள்ளியானும்
பங்கயத்து மேல் அயனும் பரவிக் காணா,
“குடமூக்கே குடமூக்கே” என்பீர் ஆகில்,
கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகல் ஆமே.

9

தண் காட்ட, சந்தனமும் தவள நீறும்; தழை அணுகும் குறுங்
கொன்றை மாலை சூடி;
கண் காட்டா, கருவரை போல்-அனைய காஞ்சிக் கார் மயில்
அம் சாயலார் கலந்து காண;
எண் காட்டாக் காடு அங்கு இடமா நின்று(வ்) எரி வீசி; இரவு
ஆடும் இறைவர் மேய
“வெண்காடே வெண்காடே” என்பீர் ஆகில், வீடாத
வல்வினை நோய் வீட்டல் ஆமே.

10

தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்?
புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே?
வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம்
ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா!
சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ்
மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் “நமச்சிவாய” என்று எழுவார்க்கு
இரு விசும்பில் இருக்கல் ஆமே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, இயமானனாய், எறியும்
காற்றும் ஆகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய்,
அட்ட மூர்த்தி ஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம்
உருவும் தாமே ஆகி,
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி, நிமிர் புன்சடை
அடிகள் நின்ற ஆறே!.

2

மண் ஆகி, விண் ஆகி, மலையும் ஆகி, வயிரமும் ஆய்,
மாணிக்கம் தானே ஆகி,
கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி, கலை ஆகி,
கலை ஞானம் தானே ஆகி,
பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி, பிரளயத்துக்கு
அப்பால் ஓர் அண்டம் ஆகி,
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி, எழும் சுடர்
ஆய் எம் அடிகள் நின்ற ஆறே!.

3

கல் ஆகி, களறு ஆகி, கானும் ஆகி, காவிரி ஆய், கால் ஆறு
ஆய், கழியும் ஆகி,
புல் ஆகி, புதல் ஆகி, பூடும் ஆகி, புரம் ஆகி, புரம் மூன்றும்
கெடுத்தான் ஆகி,
சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி, சுலாவு ஆகி,
சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி,
நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் ஆகி, நெடுஞ்சுடர் ஆய்
நிமிர்ந்து, அடிகள் நின்ற ஆறே!.

4

காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு
ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி,
கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி, குரை
கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானும்(ம்) ஆய்,
நீற்றானாய், நீறு ஏற்ற மேனி ஆகி, நீள் விசும்பு ஆய், நீள்
விசும்பின் உச்சி ஆகி,
ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர்
ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.

5

தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை ஆகி, அத் திசைக்கு
ஓர் தெய்வம் ஆகி,
தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும்
தண் மதியும் ஆகி,
காய் ஆகி, பழம் ஆகி, பழத்தில் நின்ற இரதங்கள்
நுகர்வானும் தானே ஆகி,
நீ ஆகி, நான் ஆகி, நேர்மை ஆகி, நெடுஞ்சுடர் ஆய்,
நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே.

6

அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் ஆகி, அருமறையோடு
ஐம்பூதம் தானே ஆகி,
பங்கம் ஆய், பல சொல்லும் தானே ஆகி, பால் மதியோடு
ஆதி ஆய், பான்மை ஆகி,
கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி,
மலை ஆகி, கழியும் ஆகி,
எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர்
ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.

7

மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும்
தானே ஆகி,
கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக்
குழகன் ஆகி,
போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு
அறுக்கும் புனிதன் ஆகி,
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி, அழல் வண்ண
வண்ணர் தாம் நின்ற ஆறே!.

8

ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி,
அழல் ஆகி, அவியும் ஆகி,
நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் ஆகி, நாதனாய்,
வேதத்தின் உள்ளோன் ஆகி,
பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி, பூக்குளால்
வாசம் ஆய் நின்றான் ஆகி,
தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர்
ஆய், சென்று அடிகள் நின்ற ஆறே!.

9

நீர் ஆகி, நீள் அகலம் தானே ஆகி, நிழல் ஆகி, நீள்
விசும்பின் உச்சி ஆகி,
பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை ஆகி, பெரு
மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி,
ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம்
ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய்,
சென்று அடிகள் நின்ற ஆறே!.

10

மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம்
ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் ஆகி,
பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகி, பரப்பு ஆகி,
பரலோகம் தானே ஆகி,
பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய்,
புராணன் தானே ஆகி,
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம்
அடிகள் நின்ற ஆறே!.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
ஊர்ந்த செல்வன் நீயே.

2

வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்; வெய்ய வினைப்
பகையும் பைய நையும்;
எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்; எங்கு எழில் என்
ஞாயிறு? எளியோம் அல்லோம்
அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி, அனல் ஆடி, ஆன்
அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர்,
என் சிந்தையாரே.

3

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால்
ஆர் ஒருவர் அடங்காதாரே?
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால்
ஆர் ஒருவர் உருகாதாரே?
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர்
ஒருவர் பணியாதாரே?
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர்,
கண்ணுதலாய்! காட்டாக்காலே?.

4

நல் பதத்தார் நல் பதமே! ஞானமூர்த்தீ! நலஞ்சுடரே! நால்
வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு
அரிய சூழலாய்! இது உன் தன்மை;
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம் தன்னுள் நிலாவாத
புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன்-கனகம்,
மா மணி, நிறத்து எம் கடவுளானே!.

5

திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும், திரு வெண் நீறு
அணியாத திரு இல் ஊரும்,
பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும், பாங்கினொடு
பல தளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும், விதானமும்
வெண்கொடியும் இல்லா ஊரும்,
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும்,
அவை எல்லாம் ஊர் அல்ல; அடவி- காடே!.

6

திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர்
திறம் ஒரு கால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன்
மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி
அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!.

7

நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; நினைப்பார்கள்
மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்;
மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; மறை
நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்;
பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்;
பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை,
“என் ஆனாய்! என் ஆனாய்!” என்னின் அல்லால்,
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?.

8

அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; அருள்
நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்;
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; எனை
ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், பிழைத்
தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! எம்பெருமான்
திருக்கருணை இருந்த ஆறே!.

9

குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்;
குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய
நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்;
நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்;
வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; என் செய்வான்
தோன்றினேன், ஏழையேனே?.

10

சங்க நிதி பதும நிதி இரண்டும் தத்து தரணியொடு
வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய்
ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,
அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகை
வீரட்டானம் ஆட்சி கொண்டார்;
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார்; தலை
அதனில் பலி கொண்டார்; நிறைவு ஆம் தன்மை
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார்; மான் இடம்
கொண்டார்; வலங்கை மழுவாள் கொண்டார்;
காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கி;
கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே.

2

முப்புரி நூல் வரை மார்பில் முயங்கக் கொண்டார்;
முது கேழல் முளை மருப்பும் கொண்டார், பூணா;
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார்;
செம்மேனி வெண் நீறு திகழக் கொண்டார்;
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார்; சுடர்
முடி சூழ்ந்து, அடி அமரர் தொழவும் கொண்டார்;
அப் பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார்
அடியேனை ஆள் உடைய அடிகளாரே.

3

முடி கொண்டார்; முளை இள வெண் திங்களோடு மூசும் இள
நாகம் உடன் ஆகக் கொண்டார்;
அடி கொண்டார், சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப; அடங்காத
முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்;
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கைக் கொண்டார்;
மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்;
துடி கொண்டார்; கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை
தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே.

4

பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்;
பூதப்படைகள் புடை சூழக் கொண்டார்;
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார்; அனைத்து
உலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்;
கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்;
கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்;
செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை
ஆட்கொண்ட சிவனார் தாமே.

5

அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்; அரு
மறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்;
சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார்; சுடுகாடு
நடம் ஆடும் இடமாக் கொண்டார்;
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார்;
மாகாளன் வாசல் காப்பு ஆகக் கொண்டார்;
தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண்
தீர்த்து என் தன்னை ஆட் கொண்டார் தாமே.

6

பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார்; பவள நிறம்
கொண்டார்; பளிங்கும் கொண்டார்;
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார்;
நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார்;
வார் அடங்கு வனமுலையார் மையல் ஆகி வந்து இட்ட
பலி கொண்டார்; வளையும் கொண்டார்;
ஊர் அடங்க, ஒற்றி நகர் பற்றிக் கொண்டார் உடல் உறு
நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

7

அணி தில்லை அம்பலம் ஆடு அரங்காக் கொண்டார்; ஆலால
அரு நஞ்சம் அமுதாக் கொண்டார்;
கணி வளர் தார்ப் பொன் இதழிக் கமழ்தார் கொண்டார்; காதல்
ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார்;
மணி பணத்த அரவம் தோள்வளையாக் கொண்டார்; மால் விடை
மேல் நெடுவீதி போதக் கொண்டார்;
துணி புலித்தோலினை ஆடை உடையாக் கொண்டார்; சூலம்
கைக் கொண்டார் தொண்டு எனைக் கொண்டாரே.

8

பட மூக்கப் பாம்பு அணையானோடு, வானோன், பங்கயன்,
என்று அங்கு அவரைப் படைத்துக் கொண்டார்;
குட மூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்; கூற்று
உதைத்து ஓர் வேதியனை உய்யக் கொண்டார்;
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக் கொண்டார்; நினையாத
பாவிகளை நீங்கக் கொண்டார்;
இடம் ஆக்கி இடை மருதும் கொண்டார், பண்டே;
என்னை இந் நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே.

9

எச்சன் இணை தலை கொண்டார்; பகன் கண் கொண்டார்;
இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக் கொண்டார்;
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்; விறல்
அங்கி கரம் கொண்டார்; வேள்வி காத்து,
உச்ச நமன் தாள் அறுத்தார்; சந்திரனை உதைத்தார்;
உணர்வு இலாத் தக்கன் தன் வேள்வி எல்லாம்
அச்சம் எழ அழித்துக் கொண்டு, அருளும் செய்தார்
அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே.

10

சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின்
இசை வீணை தடவிக் கொண்டார்;
உடை ஒன்றில் புள்ளி உழைத்தோலும் கொண்டார்; உள்குவார்
உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்;
கடை முன்றில் பலி கொண்டார்; கனலும் கொண்டார்; காபால
வேடம் கருதிக் கொண்டார்;
விடை வென்றிக் கொடி அதனில் மேவக் கொண்டார்
வெந்துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

11

குரா மலரோடு, அரா, மதியம், சடை மேல் கொண்டார்;
குடமுழ, நந்தீசனை, வாசகனாக் கொண்டார்;
சிராமலை தம் சேர்வு இடமாத் திருந்தக் கொண்டார்;
தென்றல் நெடுந்தேரோனைப் பொன்றக் கொண்டார்;
பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்; பருப்பதம்
கைக்கொண்டார்; பயங்கள் பண்ணி
இராவணன் என்று அவனைப் பேர் இயம்பக் கொண்டார்
இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

அண்டம் கடந்த சுவடும் உண்டோ? அனல் அங்கை
ஏந்திய ஆடல் உண்டோ?
பண்டை எழுவர் படியும் உண்டோ? பாரிடங்கள்
பல சூழப் போந்தது உண்டோ?
கண்டம் இறையே கறுத்தது உண்டோ? கண்ணின்
மேல் கண் ஒன்று கண்டது உண்டோ?
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ?
சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!.

2


எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
யிலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ
சொரிகின்ற புனலுண்டோ சூலம் உண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே

3

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே

4

பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ?
பாரிடங்கள் பல சூழப் போந்தது உண்டோ?
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ?
ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ?
கண் ஆர் கழல் காலற் செற்றது உண்டோ?
காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ?
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ? எவ்
வகை, எம்பிரானாரைக் கண்ட ஆறே?.

5

நீறு உடைய திருமேனி பாகம் உண்டோ? நெற்றி
மேல் ஒற்றைக் கண் முற்றும் உண்டோ?
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ?
கொல் புலித் தோல் உடை உண்டோ? கொண்ட வேடம்
ஆறு உடைய சடை உண்டோ? அரவம் உண்டோ?
அதன் அருகே பிறை உண்டோ? அளவு இலாத
ஏறு உடைய கொடி உண்டோ? இலயம் உண்டோ?
எவ் வகை, எம்பிரானாரைக் கண்ட ஆறே?.

6

பட்டமும் தோடும் ஓர் பாகம் கண்டேன்; பார்
திகழப் பலி திரிந்து போதக் கண்டேன்;
கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன்;
குழை காதில், பிறை சென்னி, இலங்கக் கண்டேன்;
கட்டங்கக் கொடி திண்தோள் ஆடக் கண்டேன்;
கனம் மழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்;
சிட்டனைத் திரு ஆலவாயில் கண்டேன்-தேவனைக்
கனவில் நான் கண்ட ஆறே!.

7

அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன்;
அலர் கொன்றைத்தார் அணிந்த ஆறு கண்டேன்;
பலிக்கு ஓடித் திரிவார் கைப் பாம்பு கண்டேன்;
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்;
கலிக் கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்; கறை
மிடறும் கண்டேன்; கனலும் கண்டேன்;
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன்
-மறை வல்ல மா தவனைக் கண்ட ஆறே!.

8

நீறு ஏறு திருமேனி நிகழக் கண்டேன்; நீள்
சடைமேல் நிறை கங்கை ஏறக் கண்டேன்;
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ளக் கண்டேன்;
கொடு கொட்டி, கை அலகு, கையில் கண்டேன்;
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன்;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆகக் கண்டேன்;
ஏறு ஏறி இந் நெறியே போதக் கண்டேன்-இவ்
வகை எம்பெருமானைக் கண்ட ஆறே!.

9

விரையுண்ட வெண் நீறு தானும் உண்டு; வெண்
தலை கை உண்டு; ஒரு கை வீணை உண்டு;
சுரை உண்டு; சூடும் பிறை ஒன்று உண்டு; சூலமும்
தண்டும் சுமந்தது உண்டு(வ்);
அரையுண்ட கோவண ஆடை உண்டு(வ்);
அலிக்கோலும் தோலும் அழகா உண்டு(வ்);
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு(வ்)
இமையோர் பெருமான் இலாதது என்னே?.

10

“மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான்,
வார்சடையான்” என்னின், அல்லான்;
ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர்
ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி;
அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன்
அருளே கண் ஆகக் காணின் அல்லால்,
“இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன்
இறைவன்” என்று எழுதிக் காட்ட ஒணாதே.

11

பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்
புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்
மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் தன்னை
அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்
சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

2

அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும் அட்டு
உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்;
புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி உடன்
கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே;
இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்;
இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்;
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும்
சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே.

3

வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;
“மாதேவா! மாதேவா!” என்று வாழ்த்தி,
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்; நீறு
அணியும் கோலமே நிகழப் பெற்றோம்;
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல்
மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்;
பார் ஆண்டு பகடு ஏறித் திரிவார் சொல்லும் பணி
கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.

4

உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்;
உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே;
செறு வாரும் செற மாட்டார்; தீமை தானும் நன்மை
ஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்;
நறவு ஆர் பொன் இதழி நறுந் தாரோன் சீர் ஆர்
நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்;
சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர்
நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே.

5

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;
இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை;
சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்;
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்;
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;
உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.

6

“மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்-
"தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
கடுமையொடு களவு அற்றோமே.

7

நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,
நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி,
அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு
உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத்
தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர் பேசுவன
பேசுதுமோ? பிழை அற்றோமே.

8

ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை,
இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க
தேசனை, செம்மேனி வெண் நீற்றானை, சிலம்பு
அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற
நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்; நின்று
உண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே; வந்தீர் ஆர்?
மன்னவன் ஆவான் தான் ஆரே?.

9

சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்;
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி,
விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை,
வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த
உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்;
உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம்
அல்லோம்; பாசம் அற வீசும் படியோம், நாமே.

10

நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்; நாண்
அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்;
“ஆவா!” என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட
தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து
இருந்தான்; தென் திசைக்கோன் தானே வந்து,
கோ ஆடி, “குற்றேவல் செய்கு” என்றாலும், குணம்
ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.