முடி கொண்டார்; முளை இள வெண் திங்களோடு மூசும் இள
நாகம் உடன் ஆகக் கொண்டார்;
அடி கொண்டார், சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப; அடங்காத
முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்;
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கைக் கொண்டார்;
மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்;
துடி கொண்டார்; கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை
தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே.