முப்புரி நூல் வரை மார்பில் முயங்கக் கொண்டார்;
முது கேழல் முளை மருப்பும் கொண்டார், பூணா;
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார்;
செம்மேனி வெண் நீறு திகழக் கொண்டார்;
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார்; சுடர்
முடி சூழ்ந்து, அடி அமரர் தொழவும் கொண்டார்;
அப் பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார்
அடியேனை ஆள் உடைய அடிகளாரே.