கலம் சுழிக்கும் கருங்கடல் சூழ் வையம் தன்னில் கள்ளக்
கடலில் அழுந்தி, வாளா
நலம் சுழியா, எழும் நெஞ்சே! இன்பம் வேண்டில், நம்பன்
தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில்,
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய,
அருமறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில்,
“வலஞ்சுழியே வலஞ்சுழியே” என்பீர் ஆகில், வல்வினைகள்
தீர்ந்து வான் ஆளல் ஆமே.