கருத்தன் காண்; கமலத்தோன் தலையில் ஒன்றைக்
காய்ந்தான் காண்; பாய்ந்த நீர் பரந்த சென்னி
ஒருத்தன் காண்; உமையவள் ஓர்பாகத்தான் காண்;
ஓர் உருவின் மூஉரு ஆய், ஒன்று ஆய், நின்ற
விருத்தன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான்
காண்; மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.