நம்பன்காண், நரை விடை ஒன்று ஏறினான் காண்,
நாதன் காண், கீதத்தை நவிற்றினான் காண்;
இன்பன் காண், இமையா முக்கண்ணினான் காண்,
ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு
அன்பன் காண், ஆர் அழல் அது ஆடினான் காண்,
“அவன், இவன்” என்று யாவர்க்கும் அறிய ஒண்ணாச்
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.