தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்;
செவிஅவன் அறிவுநூல் கேட்கும்;
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் ; கண்கள்
விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும் ;
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே, மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே என்னும்என் மனனே.