தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
தமருகம் திருவடி திருநீ
றின்னகை மாலை கங்கைகொங் கிதழி
இளம்பிறை குழைவளர் இளமான
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.