புவனநா யகனே ! அகவுயிர்க் கமுதே !
பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநீங் குதற்கே.