பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கச்சி மேற்றளி
வ.எண் பாடல்
1

மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.

2

மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும்
பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக்
காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.

3

விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த,
பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.

4

சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும்
வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

5

ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி,
தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே.

6

மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய்,
தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற
காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.

7

மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டாா
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.

8

செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டாா
மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி
கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே.

9

வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக்
கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

10

தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.