பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமாற்பேறு
வ.எண் பாடல்
1

பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல்
வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும்
கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு
திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே.

2

ஆலத்து ஆர் நிழலில்(ல்) அறம் நால்வர்க்குக்
கோலத்தால் உரைசெய்தவன், குற்றம் இல்
மாலுக்கு ஆர் அருள் செய்தவன், மாற்பேறு
ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே.

3

துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி,
அணி வண்ணத்து அலர்கொண்டு, அடி அர்ச்சித்த
மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு
பணி வண்ணத்தவர்க்கு இல்லைஆம், பாவமே.

4

தீது அவை செய்து தீவினை வீழாதே,
காதல் செய்து கருத்தினில் நின்ற நல்
மா தவர் பயில் மாற்பேறு கைதொழப்
போதுமின்! வினை ஆயின போகுமே.

5

வார் கொள் மென்முலை மங்கை ஓர் பங்கினன்,
வார் கொள் நல்முரசம்(ம்) அறைய(வ்) அறை
வார் கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு-
வார்கள் மன்னுவர், பொன்னுலகத்திலே.

6

பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை
உண்டு; சொல்லுவன்; கேண்மின்: ஒளி கிளர்
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு
கண்டு கைதொழ, தீரும், கவலையே.

7

மழுவலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து
அழ வலார்களுக்கு, அன்புசெய்து இன்பொடும்
வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு
தொழ வலார் தமக்கு, இல்லை, துயரமே.

8

முன்னவன்(ன்), உலகுக்கு; முழுமணிப்
பொன் அவன், திகழ் முத்தொடு; போகம் ஆம்
மன்னவன்; திரு மாற்பேறு கைதொழும்
அன்னவர் எமை ஆள் உடையார்களே.

9

வேடனாய் விசய(ன்)னொடும் எய்து வெங்
காடு நீடு உகந்து, ஆடிய கண்ணுதல்-
மாடம் நீடு உயரும்-திரு மாற்பேறு
பாடுவார் பெறுவார், பரலோகமே.

10

கருத்தனாய்க் கயிலாய மலை தனைத்
தருக்கினால் எடுத்தானைத் தகரவே
வருத்தி, ஆர் அருள் செய்தவன் மாற்பேறு
அருத்தியால்-தொழுவார்க்கு இல்லை, அல்லலே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமாற்பேறு
வ.எண் பாடல்
1

ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப்
பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.

2

அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள்
நிச்சலும் நினையாய், வினை போய் அற!
கச்ச மா விடம் உண்ட கண்டா! என,
வைச்ச மா நிதி ஆவர், மாற்பேறரே.

3

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்?
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்,
மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.

4

இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்!
அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்;
பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர்
மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே.

5

சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்!
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்,
கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர்
மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே.

6

ஈட்டும் மா நிதி சால இழக்கினும்,
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்,
காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில்,
வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.

7

ஐயனே! அரனே! என்று அரற்றினால்,
உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்;
செய்ய பாதம் இரண்டும் நினையவே,
வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

உந்திச் சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்
மந்தி பாய் பொழில் சூழும்-மாற்பேறு என,
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே.