பார் அவன் காண், விசும்பு அவன் காண், பவ்வம் தான்
காண், பனி வரைகள் இரவினொடு பகல் ஆய் நின்ற
சீரவன் காண், திசையவன் காண், திசைகள் எட்டும்
செறிந்தவன் காண், சிறந்த(அ)டியார் சிந்தை செய்யும்
பேரவன் காண், பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன்
காண், அரியவன் காண், பெற்றம் ஊர்ந்த
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே.