பெருந் தவத்து எம் பிஞ்ஞகன் காண், பிறை சூடீ
காண், பேதையேன் வாதை உறு பிணியைத் தீர்க்கும்
மருந்து அவன் காண், மந்திரங்கள் ஆயினான் காண்,
வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண்,
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன் காண், அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.