பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பருப்பதம்
வ.எண் பாடல்
1

சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;
இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி;
விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப்
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே.

2

நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில்
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை-உள்கு, மட நெஞ்சே!
வாய் புல்கு தோத்திரத்தால், வலம்செய்து, தலைவணங்கி,
பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே.

3

துனி உறுதுயர் தீரத் தோன்றி ஓர் நல்வினையால்
இனி உறுபயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்!
கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழை உகளும்,
பனி உறு கதிர் மதியான், பருப்பதம் பரவுதுமே.

4

“கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான்,
எங்கள் நோய் அகல நின்றான்” என, அருள் ஈசன் இடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த
பைங்கண் வெள் ஏறு உடையான்-பருப்பதம் பரவுதுமே.

5

துறை பல சுனை மூழ்கி, மலர் சுமந்து ஓடி,
மறை ஒலி வாய் மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்த,
சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா,
பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே.

6

சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில்,
ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்!
கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால்
பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே.

7

புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ,
தொடை புல்கு நறுமாலை திருமுடி மிசை ஏற,
விடை புல்கு கொடி ஏந்தி, வெந்த வெண் நீறு அணிவான்-
படை புல்கு மழுவாளன்-பருப்பதம் பரவுதுமே.

8

நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே
மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமை,
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடைக் கரந்தான்தன்-
பனைத்திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே.

9

மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்,-
திரு உரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும்,
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

10

சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர், சமண்குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஒர் பேய்த்தேர்ப் பின்
குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்! குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

11

வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான்,
பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை,
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல
ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே.