பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆமாத்தூர்
வ.எண் பாடல்
1

துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?

2

கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில்
மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி,
"அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்
பெம்மான்!" என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.

3

பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்,
ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.

4

கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை மாதராள
பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண் எல்லாம் காணாத கண்களே

5

பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே
சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே?

6

சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால்
காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான்,
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான்,அத்
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.

7

மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

8

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால்,
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே

9

புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே?
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான், எம்
வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே?

10

பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ சார,
கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான்
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே?

11

ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,
கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆமாத்தூர்
வ.எண் பாடல்
1

குன்ற வார்சிலை, நாண் அரா, வரி வாளி, கூர் எரி, காற்றின், மும்மதில்
வென்ற ஆறு எங்ஙனே? விடை ஏறும் வேதியனே!
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!

2

பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்,
வெருவ, உண்டு உகந்த அருள் என்கொல்? விண்ணவனே!
கரவு இல் மா மணி பொன் கொழித்து, இழி சந்து கார்
அகில் தந்து, பம்பை நீர்
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே!

3

நீண்ட வார்சடை தாழ, நேரிழை பாட, நீறு மெய் பூசி, மால் அயன்
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என்?
பூண்ட கேழல் மருப்பு, அரா, விரிகொன்றை, வாள் வரி ஆமை, பூண் என
ஆண்ட நாயகனே! ஆமாத்தூர் அம்மானே!

4

சேலின் நேரன கண்ணி வெண் நகை மான்விழித் திருமாதைப் பாகம் வைத்து
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்?
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி, இன் இசை
பாட, நீள் பதி
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே!

5

தொண்டர் வந்து வணங்கி, மா மலர் தூவி. நின் கழல் ஏத்துவார் அவர்
உண்டியால் வருந்த, இரங்காதது என்னை கொல் ஆம்?
வண்டல் ஆர் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே!

6

ஓதி, ஆரணம் ஆய நுண்பொருள், அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி
நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்?
சோதியே! சுடரே! சுரும்பு அமர் கொன்றையாய்! திரு நின்றியூர் உறை
ஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே!

7

மங்கை வாள் நுதல் மான் மனத்து இடை வாடி ஊட, மணம் கமழ் சடைக்
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொல்
ஆம்?
பங்கயமது உண்டு வண்டு இசை பாட, மா மயில் ஆட, விண் முழவு
அம் கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே!

8

நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்து இடை
வென்று அடர்த்து, ஒருபால் மடமாதை விரும்புதல் என்?
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபது தான் நெரிதர
அன்று அடர்த்து உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

9

செய்யா தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி, தேட, நீள் முடி
வெய்ய ஆர் அழல் ஆய் நிமிர்கின்ற வெற்றிமை என்?
தையலாளொடு பிச்சைக்கு இச்சை, தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு,
ஐயம் ஏற்று உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

10

புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற, நின் அடி
பத்தர் பேண, நின்ற பரம் ஆய பான்மை அது என்?
"முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன்!" என்று இமையோர் பரவிடும்
அத்தனே! அரியாய்! ஆமாத்தூர் அம்மானே!

11

வாடல் வெண் தலைமாலை ஆர்த்து, மயங்கு இருள்(ள்), எரி ஏந்தி, மாநடம்
ஆடல் மேயது என்? என்று ஆமாத்தூர் அம்மானை,
கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே.