பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச, அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்; மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
கதித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி அதிர்த்து அவன் எடுத்திட(ல்)லும், அரிவை தான் அஞ்ச, ஈசன் நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்; மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
கறுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால் மறித்தலும், மங்கை அஞ்ச, வானவர் இறைவன் நக்கு, நெறித்து ஒரு விரலால் ஊன்ற, நெடுவரை போல வீழ்ந்தான்; மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
கடுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி எடுத்தலும், மங்கை அஞ்ச, இறையவன் இறையே நக்கு, நொடிப்பு அளவு(வு) விரலால் ஊன்ற, நோவதும் அலறியிட்டான்; மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
கன்றித் தன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி வென்றித் தன் கைத்தலத்தால் எடுத்தலும், வெருவ மங்கை, நன்று(த்) தான் நக்கு நாதன் ஊன்றலும், நகழ வீழ்ந்தான்; மன்றித் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி, நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி, வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்; மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால் எருத்தனாய் எடுத்த ஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன் திருத்தனாய் நின்ற தேவன் திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்; வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
கடியவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி, வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும், மருவ நோக்கிச் செடி படத் திருவிர(ல்)லால் ஊன்றலும், சிதைந்து வீழ்ந்தான்; வடிவு உற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி, இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன் நெரியத் தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்; மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச் செற்றவன் எடுத்த ஆறே, சேயிழை அஞ்ச, ஈசன் உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்; மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!