பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவான்மியூர்
வ.எண் பாடல்
1

விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர்,
அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்!
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்,
வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.

2

பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர்,
மருளும் மாந்தரை மாற்றி, மயக்கு அறுத்து
அருளுமா வல்ல ஆதியாய்! என்றலும்,
மருள் அறுத்திடும்-வான்மியூர் ஈசனே.

3

மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து,
அந்தம் இல் குணத்தானை அடைந்து, நின்று,
எந்தை! ஈசன்! என்று ஏத்திட வல்லிரேல்,
வந்து நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

4

உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால்
கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன்
வெள்ளமும்(ம்) அரவும் விரவும் சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே.

5

படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை,
வடம் கொள் மென்முலை மாது ஒரு கூறனை,
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை
மடங்க நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

6

நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்;
பஞ்சின் மெல் அடியாள் உமை பங்க! என்று
அஞ்சி, நாள்மலர் தூவி, அழுதிரேல்,
வஞ்சம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

7

நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக்
குணங்கள் தாம் பரவிக் குறைந்து உக்கவர்,
சுணங்கு பூண் முலைத் தூ மொழியார் அவர்,
வணங்க, நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

8

ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய்,
பாதி பெண் உருஆய பரமன் என்று
ஓதி, உள் குழைந்து, ஏத்த வல்லார் அவர்
வாதை தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

9

ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம், கழல் அடி
நாட்டி, நாள்மலர் தூவி, வலம்செயில்,
வாட்டம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

10

பாரம் ஆக மலை எடுத்தான் தனைச்
சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்;
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும்,
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.