தேனினும் இனியர், பால் அன நீற்றர், தீம்கரும்பு அனையர், தம்
திருவடி தொழுவார்
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், உச்சிமேல் உறைபவர்,
ஒன்று அலாது ஊரார்,
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர்
வடிவினை உடையார்,
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.