சுருதிவா னவனாம் ! திருநெடு மாலாம் !
சுந்தர விசும்பின் இந்திரனாம் !
பருதிவா னவனாம் ! படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க் கமுதாம் !
எருதுவா கனனாம் எயில்கள்மூன் றெரித்த
ஏறுசே வகனுமாம் ! பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.