பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி, நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்), ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும் பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார் வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த, முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப் பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும் இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி, பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி, சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி, விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி, உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்) ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்; காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்) ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த, காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி, பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்; கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி, சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்! செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர் பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி, கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம் சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி, படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.