பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்; எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக் கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!
தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகி நிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் விலை கொடுத்து அறுக்க மாட்டேன்; வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்- குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே!
வழித்தலைப் படவும் மாட்டேன்; வைகலும் தூய்மை செய்து பழித்திலேன்; பாசம் அற்று, பரம! நான் பரவ மாட்டேன், இழித்திலேன், பிறவி தன்னை; என் நினைந்து இருக்க மாட்டேன்- கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர்க் கோவல் வீரட்டனீரே!
சாற்றுவர், ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி காற்றுவர், கனலப் பேசி; கண் செவி மூக்கு வாயுள ஆற்றுவர்; அலந்து போனேன், ஆதியை அறிவு ஒன்று இன்றி; கூற்றுவர் வாயில் பட்டேன்-கோவல் வீரட்டனீரே!
தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு நீர்மைப் படுத்திலேன்; பரப்பு நோக்கிப் பல்மலர்(ப்) பாதம் முற்ற அடுத்திலேன்; சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம் கொடுத்திலேன்; கொடியவா, நான்! கோவல் வீரட்டனீரே!
மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும் நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து, காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே!
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் விடகிலா; ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் இடை இலேன்; என் செய்கேன், நான்? இரப்பவர் தங்கட்கு என்றும் கொடை இலேன்; கொள்வதே, நான்! கோவல் வீரட்டனீரே!
பிச்சு இலேன், பிறவி தன்னைப் பேதையேன் ; பிணக்கம் என்னும் ச்சுளே அழுந்தி வீழ்ந்து, துயரமே இடும்பை தன்னுள் சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய், வாழ மாட்டாக் கொச்சையேன் செய்வது என்னே!-கோவல் வீரட்டனீரே!
நிணத்து இடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்; மனத்து இடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் கணத்து இடை ஆட்டப் பட்டு, காதலால் உன்னைப் பேணும் குணத்து இடை வாழ மாட்டேன்-கோவல் வீரட்டனீரே!
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ் இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி, பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார் குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.