பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅண்ணாமலை
வ.எண் பாடல்
1

ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க
சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!
ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.

2

பண் தனை வென்ற இன் சொல் பாவை ஓர்பங்க! நீல-
கண்டனே! கார் கொள் கொன்றைக் கடவுளே! கமலபாதா!
அண்டனே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே.

3

உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம்
பெரு வினை பிறப்பு வீடு ஆய், நின்ற எம் பெருமான்! மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய்! அண்டர்கோவே!
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே.

4

பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண் நீற்றாய்!
செம்பொனே! மலர் செய் பாதா! சீர் தரு மணியே! மிக்க
அம் பொனே! கொழித்து வீழும் அணி அணாமலை உளானே!
என் பொனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.

5

பிறை அணி முடியினானே! பிஞ்ஞகா! பெண் ஓர்பாகா!
மறைவலா! இறைவா! வண்டு ஆர் கொன்றையாய்! வாம தேவா!
அறைகழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே!
இறைவனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.

6

புரிசடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்துக்
கரி உரி போர்வை ஆகக் கருதிய காலகாலா!
அரிகுலம் மலிந்த அண்ணாமலை உளாய்!-அலரின் மிக்க
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே.

7

இரவியும், மதியும், விண்ணும், இரு நிலம், புனலும், காற்றும்,
உரகம் ஆர் பவனம் எட்டும், திசை, ஒளி, உருவம் ஆனாய்!
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே!
பரவும் நின் பாதம் அல்லால், பரம! நான் பற்று இலேனே.

8

பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்;
நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்-
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே!
தீர்த்தனே!-நின்தன் பாதத் திறம் அலால்-திறம் இலேனே.

9

பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே!
மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்!
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே!
வால் உடை விடையாய்!-உன் தன் மலர் அடி மறப்பு இலேனே.

10

இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்!
உரத்தினால் வரையை ஊக்க, ஒரு விரல் நுதியினாலே!
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய்! அமரர் ஏறே!
சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே.