பாரானை; பாரினது பயன் ஆனானை; படைப்பு
ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை;
ஆராத இன்னமுதை, அடியார் தங்கட்கு,
அனைத்து உலகும் ஆனானை; அமரர் கோனை;
கார் ஆரும் கண்டனை; கயிலை வேந்தை;
கருதுவார் மனத்தானை; காலற் செற்ற
சீரானை; செல்வனை; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.