உற்றானை, உடல் தனக்கு ஓர் உயிர் ஆனானை,
ஓங்காரத்து ஒருவனை, அங்கு உமை ஓர்பாகம்
பெற்றானை, பிஞ்ஞகனை, பிறவாதானை,
பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானை, கற்பனவும் தானே ஆய கச்சி
ஏகம்பனை, காலன் வீழச்
செற்றானை, திகழ் ஒளியை, திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.