மலைமகள் தம்கோன் அவனை, மாநீர் முத்தை,
மரகதத்தை, மாமணியை, மல்கு செல்வக்
கலை நிலவு கையானை, கம்பன் தன்னை, காண்பு
இனிய செழுஞ்சுடரைக், கனகக் குன்றை,
விலை பெரிய வெண் நீற்று மேனியானை,
மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை,
சிலை நிலவு கரத்தானை, திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.