வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான்,
வில் பிடித்து, கொம்பு உடைய ஏனத்தின் பின்,
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள,
கொலைப் பகழி உடன் கோத்து கோரப் பூசல்;
ஆடினார், பெருங்கூத்துக் காளி காண;
அருமறையோடு ஆறு அங்கம் ஆய்ந்து கொண்டு,
பாடினார், நால்வேதம்; பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.