பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருநெல்வாயில்
வ.எண் பாடல்
1

புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார்,
நடையின் நால்விரல்கோவணம் நயந்த
உடையினார், எமது உச்சியாரே.

2

வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம்
தாங்கினார், தலைஆய தன்மையர்
நீங்கு நீர நெல்வாயிலார்; தொழ
ஓங்கினார், எமது உச்சியாரே.

3

நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார், தொழ
இச்சையால் உறைவார்; எம் ஈசனார்;
கச்சை ஆவது ஓர் பாம்பினார்; கவின்
இச்சையார்; எமது உச்சியாரே.

4

மறையினார், மழுவாளினார், மல்கு
பிறையினார், பிறையோடு இலங்கிய
நிறையினார் அ நெல்வாயிலார்; தொழும்
இறைவனார், எமது உச்சியாரே.

5

விருத்தன் ஆகி வெண்நீறு பூசிய
கருத்தனார், கனல் ஆட்டு உகந்தவர்,
நிருத்தனார் அ நெல்வாயில் மேவிய
ஒருத்தனார், எமது உச்சியாரே.

6

காரின் ஆர் கொன்றைக்கண்ணியார், மல்கு
பேரினார், பிறையோடு இலங்கிய
நீரினார் அ நெல்வாயிலார்; தொழும்
ஏரினார், எமது உச்சியாரே.

7

ஆதியார், அந்தம் ஆயினார், வினை
கோதியார், மதில் கூட்டுஅழித்தவர்,
நீதியார் அ நெல்வாயிலார்; மறை
ஓதியார், எமது உச்சியாரே.

8

பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார், ஒருகால்விரல் உற,
நெற்றி ஆர நெல்வாயிலார்; தொழும்
பெற்றியார், எமது உச்சியாரே.

9

நாடினார் மணிவண்ணன், நான்முகன்,
கூடினார் குறுகாத கொள்கையா
நீடினார் அ நெல்வாயிலார்; தலை
ஓடினார், எமது உச்சியாரே.

10

குண்டுஅமண், துவர்க்கூறை மூடர், சொல்
பண்டம் ஆக வையாத பண்பினர்
விண் தயங்கு நெல்வாயிலார்; நஞ்சை
உண்ட கண்டர், எம் உச்சியாரே.

11

நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை,
பண் பயன்கொளப் பாட வல்லவர்,
விண் பயன்கொளும் வேட்கையாளரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருநெல்வாயில் அரத்துறை
வ.எண் பாடல்
1

எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று
ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது
அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

2

ஈர வார் சடை தன் மேல் இளம்பிறை அணிந்த
எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது
அன்றால்
வாரி மா மலர் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

3

பிணி கலந்த புன்சடைமேல் பிறை அணி சிவன் எனப்
பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது
அன்றால்
மணி கலந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு
கரைமேல்,
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

4

துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண் நீற்றினர்
ஆகி,
உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது
அன்றால்
பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு
கரைமேல்,
அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

5

வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று
உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது
அன்றால்
முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி
நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

6

உரவு நீர் சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து
ஏத்திப்
பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்து கைகூடுவது அன்றால்
குரவ மா மலர் உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அரவம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

7

நீல மா மணி மிடற்று, நீறு அணி சிவன்! எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கோல மா மலர் உந்தி, குளிர் புனல் நிவா மல்கு
கரைமேல்,
ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

8

செழுந் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன்
அலற,
அழுந்த ஊன்றிய விரலான்; "போற்றி!" என்பார்க்கு
அல்லது அருளான்
கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு
கரைமேல்,
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்
தம்(ம்) அருளே

9

நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க
(அ)ரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது
அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரை
மேல்,
அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்
தம்(ம்) அருளே

10

சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும்
பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது
அன்றால்
பூக் கமழ்ந்து பொன் உந்தி, பொரு புனல் நிவா மல்கு
கரைமேல்,
ஆக்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

11

கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளை
முறைமையால் சொன்ன பாடல், மொழியும் மாந்தர் தம்
வினை போய்ப்
பறையும், ஐயுறவு இல்லை, பாட்டு இவை பத்தும்
வல்லார்க்கே.