பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி, வர இல் தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி, வளர் பொன் காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே.
புற்று அரவு பற்றிய கை, நெற்றியது மற்று ஒரு கண், ஒற்றை விடையன், செற்றது எயில், உற்றது உமை, அற்றவர்கள் நல்-துணைவன், உற்ற நகர்தான்- “சுற்றும் மணி பெற்றது ஒளி; செற்றமொடு குற்றம் இலது; எற்று?” என வினாய், கற்றவர்கள் சொல்-தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாயமலையே.
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்குமலர் தூய், “எங்கள் வினை, சங்கை அவை, இங்கு அகல!” அங்கம் மொழி எங்கும் உள ஆய், திங்கள் இருள் நொங்க, ஒளி விங்கி, மிளிர் தொங்கலொடு தங்க, அயலே கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாயமலையே.
முடிய சடை, பிடியது ஒரு வடிய மழு உடையர், செடி உடைய தலையில் வெடிய வினை கொடியர் கெட, இடு சில்பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர, கடிய குரல் நெடிய முகில் மடிய, அதர் அடி கொள் கயிலாயமலையே.
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ, விடம் கிளர் படம் கொள் அரவம் மடங்கு ஒளி படர்ந்திட, நடம் தரு விடங்கனது இடம் தண்முகில் போய்த் தடங்கடல் தொடர்ந்து, உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால், கடுங் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாயமலையே.
ஏதம் இல பூதமொடு, கோதை துணை ஆதி முதல், வேத விகிர்தன், கீதமொடு நீதிபல ஓதி மறவாது பயில் நாதன், நகர்தான்- தாது பொதி போது விட, ஊது சிறை மீது துளி கூதல் நலிய, காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாயமலையே.
சென்று பல வென்று உலவு புன்தலையர் துன்றலொடும் ஒன்றி, உடனே- நின்று, அமரர் என்றும் இறைவன் தன் அடி சென்று பணிகின்ற நகர்தான்- துன்று மலர் பொன்திகழ் செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ, கன்று, பிடி, துன்று களிறு, என்று இவை முன் நின்ற கயிலாயமலையே.
மருப்பு இடை நெருப்பு எழு தருக்கொடு செருச் செய்த பருத்த களிறின் பொருப்பு இடை விருப்பு உற இருக்கையை ஒருக்கு உடன் அரக்கன் உணராது, ஒருத்தியை வெருக்கு உற வெருட்டலும், நெருக்கு என நிருத்த விரலால், கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே.
பரிய திரை பெரிய புனல், வரிய புலி உரி அது உடை, பரிசை உடையன், வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர், பிரிவு இல் நகர்தான்- பெரிய எரி உருவம் அது தெரிய, உரு பரிவு தரும் அருமை அதனால், கரியவனும், அரிய மறை புரியவனும், மருவு கயிலாயமலையே.
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை, துண்ட மதியோடு இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள்கண்டர் இடம் ஆம் குண்டு அமண வண்டர் அவர், மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் கண்டவர்கள் கொண்டவர்கள், பண்டும் அறியாத கயிலாயமலையே.
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி, அகிலும் கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல், எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப் பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம் எளிதே.
மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா வெண்நாவல் விரும்பு மயேந்திரரும், கண்ணது ஓங்கிய கயிலையாரும், அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார் வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்; கந்த வார்சடை உடைக் கயிலையாரும்; அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
மால் அயன் தேடிய மயேந்திரரும், காலனை உயிர்கொண்ட கயிலையாரும், வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும், ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே.
கருடனை ஏறு அரி, அயனார், காணார் வெருள் விடை ஏறிய மயேந்திரரும்; கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும்; அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
மதுசூதனன் நான்முகன் வணங்க(அ)ரியார் மதி அது சொல்லிய மயேந்திரரும், கதிர்முலை புல்கிய கயிலையாரும், அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா மிக்கவர் கயிலை மயேந்திரரும், தக்கனைத் தலை அரி தழல் உருவர் அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
கண்ணனும், நான்முகன், காண்பு அரியார் வெண் நாவல் விரும்பு மயேந்திரரும், கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள் அண்ணல், ஆரூர் ஆதி ஆனைக்காவே.
கடல் வண்ணன் நான்முகன் காண்பு அரியார் தடவரை அரக்கனைத் தலை நெரித்தார் விடம் அது உண்ட எம் மயேந்திரரும்; அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே.
ஆதி, மால் அயன் அவர் காண்பு அரியார் வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்; காதில் ஒர் குழை உடைக் கயிலையாரும்; ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே.
அறிவு இல் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்! வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும், மறிகடலோன் அயன் தேடத் தானும் அறிவு அரு கயிலையோன்-ஆனைக்காவே.
ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார் கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும், ஆன ஆரூர், ஆதி ஆனைக்காவை ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே!