பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆலவாய்
வ.எண் பாடல்
1

மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
“பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு
எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

2

ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்கு உறு
பக்கமா,
மா கதக்கரி போல்-திரிந்து, புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

3

அத் தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு
அச்சமா,
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப்
பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்கு உற நக்கம்
ஏய்,
சித்திரர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

4

சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும், கருமை சேர்
கந்துசேனனும், கனகசேனனும், முதல் அது ஆகிய பெயர்
கொளா
மந்தி போல்-திரிந்து, ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன்
அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

5

கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது ஓர் எலியின்
தொழில்,
பாட்டு மெய் சொலி, பக்கமே செலும் எக்கர்தங்களை, பல்
அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை, கசிவு ஒன்று
இலாச்
சேட்டை கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

6

கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும், குமண மா
சுனகநந்தியும், குனகநந்தியும், திவணநந்தியும் மொழி கொளா
அனகநந்தியர், “மது ஒழிந்து அவமே தவம் புரிவோம்” எனும்
சினகருக்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

7

“பந்தணம்(ம்) அவை ஒன்று இலம்; பரிவு ஒன்று இலம்(ம்)!”
என வாசகம்
மந்தணம் பல பேசி, மாசு அறு சீர்மை இன்றி அநாயமே,
அந்தணம்(ம்), அருகந்தணம், மதிபுத்தணம், மதிசிந்தணச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

8

“மேல் எனக்கு எதிர் இல்லை” என்ற அரக்கனார் மிகை செற்ற
தீப்
போலியைப் பணிய(க்)கிலாது, ஒரு பொய்த்தவம் கொடு,
குண்டிகை
பீலி கைக்கொடு, பாய் இடுக்கி, நடுக்கியே, பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

9

பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்) அடி
போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல்-தலையைப் பறித்து, ஒரு
பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய்
சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

10

தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து, இடுக்கே மடுத்து, ஒரு
பொய்த் தவம்
பொங்கு நூல்வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும்
பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.

11

“எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு
ஆலவாய்ச்
சொக்கன் என் உள் இருக்கவே”, துளங்கும் முடித்
தென்னன்முன், இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர்
இல்லையே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆலவாய்
வ.எண் பாடல்
1

காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல்,
நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்;
வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே?

2

மத்தயானையின் ஈர் உரி மூடிய
அத்தனே! அணி ஆலவாயாய்! பணி
பொய்த்த வன் தவ வேடத்தர் அம் சமண்
சித்தரை அழிக்கத் திரு உள்ளமே?

3

மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-
தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே?

4

ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!
நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!

5

வையம் ஆர் புகழாய்! அடியார் தொழும்
செய்கை ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண்கையரைப்
பைய வாது செயத் திரு உள்ளமே?

6

நாறு சேர் வயல்-தண்டலை மிண்டிய
தேறல் ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
வீறு இலாத் தவ மோட்டு அமண்வேடரைச்
சீறி, வாது செயத் திரு உள்ளமே?

7

பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும்
தொண்டருக்கு எளியாய்! திரு ஆலவாய்
அண்டனே! அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து, உளறத் திரு உள்ளமே?

8

அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன் முடிச்
செருக்கினைத் தவிர்த்தாய்! திரு ஆலவாய்
பரக்கும் மாண்பு உடையாய்! அமண்பாவரை,
கரக்க, வாதுசெயத் திரு உள்ளமே?

9

மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறி
ஆலவாய் உறையும்(ம்) அண்ணலே! பணி
மேலைவீடு உணரா வெற்று அரையரைச்
சால வாது செயத் திரு உள்ளமே?

10

கழிக் கரைப் படு மீன் கவர்வார் அமண்-
அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே?
தெழிக்கும் ம்புனல் சூழ் திரு ஆலவாய்
மழுப்படை உடை மைந்தனே! நல்கிடே!

11

“செந்து எனா முரலும் திரு ஆலவாய்
மைந்தனே!” என்று, வல் அமண் ஆசு அற,
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்-
பந்தன் சொல் பகரும், பழி நீங்கவே!

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆலவாய்
வ.எண் பாடல்
1

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

2

சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

3

தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!

4

சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

5

நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!

6

“தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,
“அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

7

செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!

8

தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

9

தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

10

எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

11

அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆலவாய் - திருவிராகம்
வ.எண் பாடல்
1

வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள் நின்கழல்
பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே!
காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில்
கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே?

2

பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா,
கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல் ஆலவாயிலாய்!
எட்டு இசைந்த மூர்த்தியாய்! இருந்த ஆறு இது என்னையே?

3

குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!
சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!
கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை
முற்றும் நீ! புகந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே?

4

முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ! நீ முழங்கு அழல்
அதிர வீசி ஆடுவாய்! அழகன் நீ! புயங்கன் நீ!
மதுரன் நீ! மணாளன் நீ! மதுரை ஆலவாயிலாய்!
சதுரன் நீ! சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே!

5

கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!
பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே,
நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும்,
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே.

6

பொன் தயங்கு-இலங்கு ஒளி(ந்) நலம் குளிர்ந்த புன்சடை
பின் தயங்க ஆடுவாய்! பிஞ்ஞகா! பிறப்பு இலீ!
கொன்றை அம் முடியினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே.

7

ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!
சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்!
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்,
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே?

8

கறை இலங்கு கண்டனே! கருத்து இலாக் கருங்கடல்-
துறை இலங்கை மன்னனைத் தோள் அடர ஊன்றினாய்!
மறை இலங்கு பாடலாய்! மதுரை ஆலவாயிலாய்!
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.

9

தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக, நாள்தொறும்
கோவண(வ்) உடையினாய்! கூடல் ஆலவாயிலாய்!
தீ வணம் மலர்மிசைத் திசைமுகனும், மாலும், நின்
தூ வணம்(ம்) அளக்கிலார், துளக்கம் எய்துவார்களே

10

தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும் சமணரும்
போற்று இசைத்து, நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளா
கூற்று உதைத்த தாளினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நால்-திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே?

11

போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்-
பாய கேள்வி ஞானசம்பந்தன்-நல்ல பண்பினால்,
ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத்
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆலவாய் - நாலடிமேல் வைப்பு
வ.எண் பாடல்
1

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
பாதி மாது உடன் ஆய பரமனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

2

வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம்(ம்) உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாதுசெயத் திரு உள்ளமே?
மை திகழ்தரு மா மணிகண்டனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

3

மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய, வாதுசெயத் திரு உள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

4

அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்து வாழ் அமண்கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாதுசெயத் திரு உள்ளமே?
முறித்த வாள் மதிக்கண்ணி முதல்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

5

அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே?
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

6

வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை
ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

7

அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல், வாதுசெயத் திரு உள்ளமே?
தழல் இலங்கு திரு உருச் சைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

8

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

9

நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
கோலம் மேனி அது ஆகிய குன்றமே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

10

அன்று முப்புரம் செற்ற அழக! நின்
துன்று பொன்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெயத் திரு உள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

11

கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆலவாய் - திருஇயமகம்
வ.எண் பாடல்
1

ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது
இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர்
புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம்
மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை
அண்டர்கள் அத்தனே.

2

பாதி ஆய் உடன் கொண்டது மாலையே; பம்பு தார் மலர்க்
கொன்றை நல்மாலையே;
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே; கொண்ட நன்
கையில் மான் இடம் ஆகனே;
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன் ஐயே; நாடி அன்று
உரிசெய்ததும் ஆனையே;
வேத நூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல
நல்வாயிலே.

3

காடு நீடது உறப் பல கத்தனே; காதலால் நினைவார்தம்
அகத்தனே;
பாடு பேயோடு பூதம் மசிக்கவே, பல்பிணத் தசை நாடி
அசிக்கவே;
நீடும் மாநடம் ஆட விருப்பனே; நின் அடித் தொழ நாளும்
இருப்பனே;
ஆடல் நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய
அப்பனே.

4

பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம் ஓதினர்
பாவம் மறுத்தியே;
துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே; தூய வெள் எருது
ஏறி இருத்தியே;
கண்டு காமனை வேவ விழித்தியே; காதல் இல்லவர் தம்மை
இழித்தியே
அண்ட நாயகனே! மிகு கண்டனே! ஆலவாயினில்
மேவிய(அ) கண்டனே!

5

சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி, அன்பு
செகுத்தனன்பால் ஐயே
வென்றி சேர் மழுக்கொண்டு, முன்காலையே, வீட வெட்டிடக்
கண்டு, முன் காலையே,
நின்ற மாணியை, ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து,
அனகம் கையால்,
அன்று, நின் உரு ஆகத் தடவியே! ஆலவாய், அரன்
நாகத்து அடவியே.

6

நக்கம் ஏகுவர், நாடும் ஓர் ஊருமே; நாதன் மேனியில்
மாசுணம் ஊருமே;
தக்க பூ, மனைச் சுற்ற, கருளொடே, தாரம், உய்த்தது,
பாணற்கு, அருளொடே;
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய
தொண்டர்க்கு அணியையே;
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே; ஆலவாய், அரனார்
உமையோடுமே.

7

வெய்யவன் பல் உகுத்தது குட்டியே; வெங்கண் மாசுணம்,
கையது, குட்டியே;
ஐயனே! அனல் ஆடிய மெய்யனே! அன்பினால்
நினைவார்க்கு அருள் மெய்யனே!
வையம் உய்ய அன்று உண்டது காளமே; வள்ளல் கையது
மேவு கங்காளமே;
ஐயம் ஏற்பது உரைப்பது வீண், ஐயே! ஆலவாய் அரன்
கையது வீணையே.

8

தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே, தொக்க தேவர்
செருக்கை மயக்கியே,
வாள் அரக்கன் நிலத்துக் களித்துமே, வந்து அ(ம்)மால்வரை
கண்டு உகளித்துமே,
நீள்பொருப்பை எடுத்த உன்மத்தனே, நின் விரல்-தலையால்
மதம் மத்தனே!
ஆளும் ஆதி முறித்தது மெய்கொலோ? ஆலவாய் அரன்
உய்த்ததும் மெய்கொலோ?

9

பங்கயத்து உள நான்முகன், மாலொடே, பாதம் நீள் முடி
நேடிட, மாலொடே,
துங்க நல்-தழலின் உருஆயுமே; தூய பாடல் பயின்றது,
வாயுமே;
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு,
உரைசெய்வது பிச்சு ஐயே!
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே; ஆலவாய், அரனாரது
இடக் கையே.

10

தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர் நாள்தொறும்
சேர்வது கானையே;
கோரம் அட்டது புண்டரிகத்தையே; கொண்ட, நீள் கழல்
புண்டரிகத்தையே;
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே; நீள்சடைத்
திகழ்கின்றது நாகமே;
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே; ஆலவாய், அரனார்
இடம் என்பதே.

11

ஈன ஞானிகள் தம்மொடு விரகனே! ஏறு பல்பொருள்
முத்தமிழ் விரகனே,
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய
சம்பந்தனே!
ஆன வானவர் வாயின் உளத்தனே! அன்பர் ஆனவர்
வாயினுள் அத்தனே!
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு, இவை
நற்று அமிழ் பத்துமே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆலவாய்
வ.எண் பாடல்
1

மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக்
கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும்
பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும்
பொருள்களும் அருள
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும்
இதுவே.

2

வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன்,
வெள்ளைநீறு அணியும்
கொற்றவன்தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று
ஏத்தும்
ஒற்றை வெள்விடையன், உம்பரார்தலைவன், உலகினில்
இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன், உறைகின்ற ஆலவாய் ஆவதும்
இதுவே.

3

செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன்
திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய,
பார் இடை நிலவும்
சந்தம் ஆர் தரளம், பாம்பு, நீர், மத்தம், தண் எருக்கம்மலர்,
வன்னி,
அந்தி வான்மதி, சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய்
ஆவதும் இதுவே.

4

கணங்கள் ஆய் வரினும், தமியராய் வரினும், அடியவர்
தங்களைக் கண்டால்,
குணம்கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ்
மணிக் கோயில்
மணம் கமழ் கொன்றை, வாள் அரா, மதியம், வன்னி,
வண் கூவிளமாலை,
அணங்கு, வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய்
ஆவதும் இதுவே.

5

செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல்
செல்வி,
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து
இனிது ஏத்த,
வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரி கதிர்
மழு உடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும்
இதுவே.

6

நலம் இலர் ஆக, நலம் அது உண்டு ஆக, நாடவர் நாடு
அறிகின்ற
குலம் இலர் ஆக, குலம் அது உண்டு ஆக, தவம் பணி
குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன், மூஇலைவேலன், கரிஉரி மூடிய
கண்டன்,
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல், ஆலவாய்
ஆவதும் இதுவே.

7

முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன்
மார்பினில் முயங்க,
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய,
நின்ற
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம்
அடுத்தால் போல்,
அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய்
ஆவதும் இதுவே.

8

நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சு எழுத்து ஓதி, நல்லராய்
நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்-தொழுது எழு குலச்சிறை
போற்ற,
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண்தோள் இருபதும்
நெரிதர ஊன்றி,
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும்
இதுவே.

9

மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்
தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால்
பணி செய்து பரவ,
விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம்
வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய்
ஆவதும் இதுவே.

10

தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன்
குணத்தினைக் குலாவக்
கண்டு, நாள்தோறும் இன்பு உறுகின்ற குலச்சிறை கருதி
நின்று ஏத்த,
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண்
நெறி இடை வாரா
அண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய்
ஆவதும் இதுவே.

11

பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர்
பணியும்
அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு
அவை போற்றி,
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ்
இவை கொண்டு
இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர்,
இனிதே.