பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால் விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை; அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி, இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும் பவளம் தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை; வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
கைப் போது மலர் தூவி, காதலித்து, வானோர்கள் முப்போதும் முடி சாய்த்து, தொழ நின்ற முதல்வனை; அப்போடு மலர் தூவி, ஐம்புலனும் அகத்து அடக்கி, எப்போதும் இனியானை:-என் மனத்தே வைத்தேனே!
அண்டம் ஆய், ஆதி ஆய், அருமறையோடு ஐம்பூதப் பிண்டம் ஆய், உலகுக்கு ஒர் பெய் பொருள் ஆம் பிஞ்ஞகனை; தொண்டர் தாம் மலர் தூவிச் சொல் மாலை புனைகின்ற இண்டை சேர் சடையானை;-என் மனத்தே வைத்தேனே!
ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானை, பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை, நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந் தூவி ஏறு ஏறும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
தேசனை; தேசங்கள் தொழ நின்ற திருமாலால் பூசனை; சனைகள் உகப்பானை; பூவின் கண் வாசனை; மலை, நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆம் ஈசனை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
நல்லானை, நல் ஆன நால்மறையோடு ஆறு அங்கம் வல்லானை, வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை, சொல்லானை, சொல் ஆர்ந்த பொருளானை, துகள் ஏதும் இல்லானை, எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானை, பதம் சந்தி; பொருள் உரு ஆம் புண்ணியனை; தரித்தானை, கங்கை நீர், தாழ் சடை மேல்; மதில் மூன்றும் எரித்தானை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
ஆகம் பத்து அரவு அணையான், அயன், அறிதற்கு அரியானை; பாகம் பெண் ஆண் பாகம் ஆய் நின்ற பசு பதியை; மா கம்பம் மறை ஓதும் இறையானை; மதில் கச்சி ஏகம்பம் மேயானை;-என் மனத்தே வைத்தேனே!
அடுத்த ஆனை உரித்தானை; அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானை; குலவரையே சிலை ஆகக் கூர் அம்பு தொடுத்தானை, புரம் எரிய; சுனை மல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை;-என் மனத்தே வைத்தேனே!
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ- கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை; செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே.
ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்; அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து; பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே!
மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார், மழு ஒன்று ஏந்திச் சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழச் செற்ற செல்வர், இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை, தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே!
பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்) ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை, வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே!
மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, கடை தொறும் பலி கொள்வார், தாம் எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை, கையினால் -தொழ வல்லார்க்குக் கடுவினை களையல் ஆமே.
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள் அரு வினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும் திரு வினை, திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல உரு வினை, உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.!
கொண்டது ஓர் கோலம் ஆகிக் கோலக்கா உடைய கூத்தன், உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான், எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னை, கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே.
படம் உடை அரவினோடு பனி மதி அதனைச் சூடி, கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச, அம்ம! இடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன் நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்த ஆறே!
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண் மார்பர் நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று, குன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர்; எம்மை இன் துயில் போது கண்டார்; இனியர்-ஏகம்பனாரே.
துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும் ஏத்த அருத்தியால் அன்பு செய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்து(வ்) எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே!
ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப் போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே!
எத்தைக்கொடு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து,-எனை,- கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்தென்னக் கோகு செய்தாய்?- முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவளத்- தொத்தினை ஏய்க்கும் படியாய்! பொழில் கச்சி ஏகம்பனே!
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்ப் பொய் அம்பு எய்து, ஆவம் அருளிச்செய்தாய்; புரம் மூன்று எரியக் கை அம்பு எய்தாய்; நுன் கழல் அடி போற்றாக் கயவர் நெஞ்சில் குய்யம் பெய்தாய்-கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே!
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல் நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான், கறைக்கண்ட! நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே? பிறைத்துண்ட வார்சடையாய்! பெருங் காஞ்சி எம் பிஞ்ஞகனே!
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்; உள்குவார் வினையைக் கரைக்கும் எனக் கைதொழுவது அல்லால், கதிரோர்கள் எல்லாம், விரைக்கொள் மலரவன், மால், எண்வசுக்கள், ஏகாதசர்கள், இரைக்கும் அமிர்தர்க்கு, அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே.
கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு(வ்) உருகிற்று, என் உள்ளமும்; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்; திரு ஒற்றியூரா! திரு ஆலவாயா! திரு ஆரூரா! ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்-கச்சி ஏகம்பனே!
அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம், உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்; புரிதரு புன் சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;- எரிதரு செஞ்சடை ஏகம்ப!-என்னோ, திருக்குறிப்பே?
பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே! கூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்-நாள் சாம்பலைப் பூசி, தரையில் புரண்டு, “நின் தாள் சரண்” என்று ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய்-கச்சி ஏகம்பனே!
ஏன்று கொண்டாய், என்னை; எம்பெருமான்! இனி, “அல்லம்” என்னில், சான்று கண்டாய் இவ் உலகம் எல்லாம்; தனியேன் என்று என்னை ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய்; பின்னை ஒற்றி எல்லாம் சோன்றுகொண்டாய்-கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே!
உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச் சூளைகள்; வாய்தல் பற்றித் துன்றி நின்றார், தொல்லை வானவர் ஈட்டம்; பணி அறிவான் வந்து நின்றார், அயனும் திருமாலும்;-மதில் கச்சியாய்!- இந்த நின்றோம் இனி எங்ஙனமோ, வந்து இறைஞ்சுவதே?