பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
கோயில்
வ.எண் பாடல்
1

செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம்; நறவம் நாறும்
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடும் ஆறே!

2

ஏறனார், ஏறு; தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார்; ஆறு சூடி; ஆயிழையாள், ஓர் பாகம்;
நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே!
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே!

3

சடையனார்; சாந்த நீற்றர்; தனி நிலா எறிக்கும் சென்னி
உடையனார்; உடை தலையில் உண்பதும், பிச்சை ஏற்று;
கடி கொள் பூந் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று (வ்) அனல்-எரி ஆடும் ஆறே!

4

பை அரவு அசைத்த அல்குல், பனி நிலா எறிக்கும் சென்னி
மை அரிக் கண்ணினாளும் மாலும் ஓர் பாகம் ஆகி,
செய் எரித் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல்- எரி ஆடும் ஆறே!

5

ஓதினார், வேதம் வாயால்; ஒளி நிலா எறிக்கும் சென்னிப்
பூதனார்; பூதம் சூழப் புலி உரி-அதளனார், தாம்;
நாதனார்; தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில் வெண் குழைகள் தாழக் கனல்-எரி ஆடும் ஆறே!

6

ஓர் உடம்பு இருவர் ஆகி, ஒளி நிலா எறிக்கும் சென்னி,
பாரிடம் பாணி செய்யப் பயின்ற, எம் பரம மூர்த்தி
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே!

7

முதல்-தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும் சென்னி,
மதக்களிற்று உரிவை போர்த்த, மைந்தரைக் காணல் ஆகும்;
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்தது ஓர் அரவம் ஆடக் கனல்-எரி ஆடும் ஆறே!

8

மறையனார், மழு ஒன்று ஏந்தி, மணி நிலா எறிக்கும் சென்னி
இறைவனார், எம்பிரானார், ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர்த் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல்-எரி ஆடும் ஆறே!

9

விருத்தனாய், பாலன் ஆகி, விரிநிலா எறிக்கும் சென்னி
நிருத்தனார்; நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழக்
கருத்தனார்; தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்த மா மேனி தன்னோடு அனல் -எரி ஆடும் ஆறே!

10

பாலனாய், விருத்தன் ஆகி, பனி நிலா எறிக்கும் சென்னி,
காலனைக் காலால் காய்ந்த, கடவுளார்; விடை ஒன்று ஏறி;
ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே-
நீலம் சேர் கண்டனார் தாம்- நீண்டு எரி ஆடும் ஆறே!

11

மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி,
நெதியன் தோள் நெரிய ஊன்றி, நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த,
மதியம் தோய், தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று(வ்) அனல்-எரி ஆடும் ஆறே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
கோயில் திரு நேரிசை
வ.எண் பாடல்
1

பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! பரம யோகீ!
எத்தினால் பத்தி செய்கேன்? என்னை நீ இகழவேண்டா;
முத்தனே! முதல்வா! தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே!

2

கருத்தனாய்ப் பாட மாட்டேன்; காம்பு அன தோளி பங்கா!
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திரு உரு உடைய சோதீ!
திருத்தம் ஆம் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே!

3

கேட்டிலேன்; கிளைபிரி(ய்)யேன்; கேட்குமா கேட்டி ஆகில்
நாட்டினேன், நின் தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே
மாட்டில் நீர் வாளை பாய, மல்கு சிற்றம்பலத்தே
கூட்டம் ஆம் குவி முலையாள் கூட நீ ஆடும் ஆறே!

4

சிந்தையைத் திகைப் பியாதே செறிவு உடை அடிமை செய்ய,
எந்தை! நீ அருளிச் செய்யாய்! யாது நான் செய்வது? என்னே!
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும் கொல்லோ!

5

கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம்
கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன், குறிப்பினாலே;
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண் திசையோரும் ஏத்த, இறைவ! நீ ஆடும் ஆறே!

6

பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன்; பாடிஆடி
“மூர்த்தியே” என்பன்,-உன்னை,-’மூவரில் முதல்வன்” என்பன்;
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்! தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா! உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்த ஆறே!

7

பொய்யினைத் தவிர விட்டுப் புறம் அலா அடிமை செய்ய,
ஐய! நீ அருளிச் செய்யாய்! ஆதியே! ஆதிமூர்த்தி!
வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பைய நின் ஆடல் காண்பான், பரம! நான் வந்த ஆறே!

8

மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே
கனைப்பரால்; என் செய்கேனோ? கறை அணி கண்டத்தானே!
தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே!

9

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ, வானவர் தலைவனே! நீ;
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அம் சொலாள் காண நின்று, அழக! நீ ஆடும் ஆறே!

10

மண் உண்ட மாலவ(ன்)னும், மலர்மிசை மன்னினானும்,
விண் உண்ட திரு உரு(வ்)வம் விரும்பினார்-காணமாட்டார்;
திண்ணுண்ட திருவே! மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும், பரம! நீ ஆடும் ஆறே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
கோயில்
வ.எண் பாடல்
1

பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும்
வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள்,
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே?

2

பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி, புலி அதளன்,
உரு உடை அம் மலைமங்கை மணாளன், உலகுக்கு எல்லாம்
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

3

தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான்,
பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்,
உடுத்த துகில் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

4

“வைச்ச பொருள் நமக்கு ஆகும்” என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன்; அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன், பிறப்பு இலி, பேர் நந்தி, உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

5

செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
மைஞ் ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்,
கைஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

6

ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை ஆட்கொண்டவன்,
தேன் ஒத்து எனக்கு இனியான், தில்லைச் சிற்றம்பலவன், எம் கோன்,
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

7

தெரித்த கணையால்-திரி புரம் மூன்றும் செந் தீயில் மூழ்க
எரித்த இறைவன், இமையவர் கோமான், இணை அடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

8

சுற்றும் அமரர், சுரபதி, “நின் திருப்பாதம் அல்லால்
பற்று ஒன்று இலோம்” என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்,
செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான், தில்லை அம்பலவன்,
நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

9

சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

10

தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து,
அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே?

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
கோயில்
வ.எண் பாடல்
1

கரு நட்ட கண்டனை, அண்டத் தலைவனை, கற்பகத்தை,
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை, செந் தீ முழங்கத்
திரு நட்டம் ஆடியை, தில்லைக்கு இறையை, சிற்றம்பலத்துப்
பெரு நட்டம் ஆடியை, “வானவர் கோன்” என்று வாழ்த்துவனே.

2

ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை;
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா;
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
“என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.

3

கல்மனவீர்! கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே?
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி,
என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே!

4

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

5

வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி; மதித்திடுமின்!
பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன்,-பத்தர் உள்ள
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான், தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ, நம் தம் கூழைமையே?

6

பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர; புரி கணங்கள்
ஆர்த்தன, கொட்டி; அரித்தன, பல் குறள் பூதக்கணம்;
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ, என் தன் கோல்வளைக்கே?

7

முடி கொண்ட மத்தமும், முக்கண்ணின் நோக்கும், முறுவலிப்பும்,
துடி கொண்ட கையும், துதைந்த வெண் நீறும், சுரி குழலாள்
படி கொண்ட பாகமும், பாய் புலித்தோலும், என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா, தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே!

8

படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்;
இடைக்கலம் அல்லேன்; எழு பிறப்பும்(ம்) உனக்கு ஆட் செய்கின்றேன்;
துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய்-அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே!

9

பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து, புரிசடைகள்
மின் ஒத்து இலங்க, பலி தேர்ந்து, உழலும் விடங்க வேடச்-
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால், இவ் இரு நிலமே.

10

சாட எடுத்தது, தக்கன் தன் வேள்வியில் சந்திரனை;
வீட எடுத்தது, காலனை; நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது,-தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ,-நம்மை ஆட்கொண்டதே!