பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது-
ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே
ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.

2

இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன செய்தொழில்;
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன கோலங்கள்;
இரண்டும் இல் இளமான்; எமை ஆள் உகந்து,
இரண்டு போதும் என் சிந்தையுள் வைகுமே.

3

மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில்
மூன்றும் ஆயின; மூ இலைச் சூலத்தன்;
மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றினன்;
மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே.

4

நாலின்மேல் முகம் செற்றதும்; மன் நிழல்
நாலு நன்கு உணர்ந்திட்டதும்; இன்பம் ஆம்
நாலுவேதம்,-சரித்ததும்,-நன்நெறி
நாலுபோல்-எம் அகத்து உறை நாதனே.

5

அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசை
அஞ்சுபோல் அரவு ஆர்த்தது, இன் தத்துவம்
அஞ்சும், அஞ்சும், ஓர் ஓர் அஞ்சும், ஆயவன்;
அஞ்சும் ஆம்-எம் அகத்து உறை ஆதியே.

6

ஆறுகால் வண்டு மூசிய கொன்றையான்;
ஆறு சூடிய அண்ட முதல்வனார்;
ஆறு கூர்மையர்க்கு அச் சமயப் பொருள்
ஆறுபோல்-எம் அகத்து உறை ஆதியே.

7

ஏழு மா மலை, ஏழ்பொழில், சூழ் கடல்-
ஏழு, போற்றும் இராவணன் கைந்நரம்பு-
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன்கழல்,
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே.

8

எட்டுமூர்த்தியாய் நின்று இயலும் தொழில்,
எட்டு வான் குணத்து, ஈசன் எம்மான்தனை
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே;
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே.

9

ஒன்பது ஒன்பது-யானை, ஒளி களிறு;
ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே,
ஒன்பது ஆம் அவை தீத் தொழிலின்(ன்) உரை;
ஒன்பது ஒத்து நின்று என் உள் ஒடுங்குமே.

10

பத்து-நூறவன், வெங் கண் வெள் ஏற்று அண்ணல்;
பத்து-நூறு, அவன் பல்சடை தோள்மிசை;
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

2

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.

3

ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து உய்யார்;
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;
தோளாத(ச்) சுரையோ, தொழும்பர் செவி?
வாளா மாய்ந்து மண் ஆகிக் கழிவரே!

4

நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண் இலீர்?
சுடலை சேர்வது சொல் பிரமாணமே;
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்,
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே!

5

பூக் கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்;
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;
ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,
காக்கைக்கே இரை ஆகி, கழிவரே!

6

குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும்,
நெறிகளும்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும்,
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்,
பொறி இலீர்! மனம் என்கொல், புகாததே?

7

வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

8

எழுது பாவை நல்லார் திறம் விட்டு, நான்,
தொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்து கொண்டு,
உழுத சால்வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே!

9

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன்,
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பவர், அவர்தம்மை நாணியே.

10

விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன்மா மணிச்சோதியான்;
உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-
கோயிலானை, குணப் பெருங்குன்றினை,
வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற
தாய் இலானை, தழுவும், என் ஆவியே.

2

முன்னை ஞான முதல்-தனி வித்தினை;
பின்னை ஞானப் பிறங்கு சடையனை;
என்னை ஞானத்து, இருள் அறுத்து, ஆண்டவன்
தன்னை; ஞானத்தளை இட்டு வைப்பனே.

3

ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்;
ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்;
ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு,
ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.

4

புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே;
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை;
புழுவினும் கடையேன் புனிதன் தமர்-
குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?

5

மலையே வந்து விழினும், மனிதர்காள்!
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரே?
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை,
கொலை செய் யானைதான், கொன்றிடுகிற்குமே?

6

கற்றுக் கொள்வன வாய் உள, நா உள;
இட்டுக் கொள்வன பூ உள; நீர் உள;
கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்;
எற்றுக்கோ, நமனால் முனிவுண்பதே?

7

மனிதர்காள்! இங்கே வம்! ஒன்று சொல்லுகேன்;
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே?
புனிதன், பொன்கழல் ஈசன், எனும் கனி
இனிது சாலவும், ஏசற்றவர்கட்கே.

8

என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்;
தன்னை, நானும் முன், ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன் அடியான் என்று அறிதலும்,
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர்
உள்ளத் தேறல்; அமுத ஒளி; வெளி;
கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல்-
வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே?

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்-
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!

2

நடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக்
கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக்
கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை
இடுக்கண் செய்யப் பெறீர், இங்கு நீங்குமே!

3

கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள் ஆகினும் ஆக; அவர்களை
நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே!

4

சாற்றினேன்: சடை நீள் முடிச் சங்கரன்,
சீற்றம் காமன்கண் வைத்தவன், சேவடி
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்,
போற்றி! என்று உரைப்பார் புடை போகலே!

5

இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்!
பிறையும் பாம்பும் உடைப் பெருமான் தமர்,
நறவம் நாறிய நன்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறு அணிவார், எதிர் செல்லலே!

6

வாமதேவன் வள நகர் வைகலும்,
காமம் ஒன்று இலராய், கை விளக்கொடு
தாமம், தூபமும், தண் நறுஞ் சாந்தமும்,
ஏமமும், புனைவார் எதிர் செல்லலே!

7

படையும் பாசமும் பற்றிய கையினீர்!
அடையன்மின், நமது ஈசன் அடியரை!
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம்
புடை புகாது, நீர், போற்றியே போமினே!

8

விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும்,
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே;
அச்சம் எய்தி அருகு அணையாது, நீர்,
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே!

9

இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்து உடன் ஏத்துவார்,
மன்னும் அஞ்சு எழுத்து ஆகிய மந்திரம்-
தன்னில் ஒன்று வல்லாரையும், சாரலே!

10

மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம்,
ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால்
பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!

11

அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்,
சுருக்கெனது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர்
சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

காசனை, கனலை, கதிர் மா மணித்-
தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்;
மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம்
ஈசனை இனி நான் மறக்கிற்பனே?

2

புந்திக்கு(வ்) விளக்குஆய புராணனை,
சந்திக்கண் நடம் ஆடும் சதுரனை,
அந்திவண்ணனை, ஆர் அழல் மூர்த்தியை,
வந்து என் உள்ளம் கொண்டானை, மறப்பனே?

3

ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்;
ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்;
ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்),
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?

4

ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,-
ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,-
ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?

5

தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை,
வான வெண்மதி சூடிய மைந்தனை,
வேனிலானை மெலிவு செய் தீ-அழல்-
ஞானமூர்த்தியை, நான் மறக்கிற்பனே?

6

கன்னலை, கரும்பு ஊறிய தேறலை,
மின்னனை, மின் அனைய உருவனை,
பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய
என்னனை, இனி யான் மறக்கிற்பனே?

7

கரும்பினை, கட்டியை, கந்தமாமலர்ச்
சுரும்பினை, சுடர்ச் சோதியுள் சோதியை,
அரும்பினில் பெரும்போது கொண்டு, ஆய் மலர்
விரும்பும் ஈசனை, நான் மறக்கிற்பனே?

8

துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை,
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை,
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை,
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே?

9

புதிய பூவினை, புண்ணிய நாதனை,
நிதியை, நீதியை, நித்திலக்குன்றினை,
கதியை, கண்டம் கறுத்த கடவுளை,
மதியை, மைந்தனை, நான் மறக்கிற்பனே?

10

கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை,
உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை,
பருகு பாலனை, பால்மதி சூடியை,
மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே?

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

அண்டத்தானை, அமரர் தொழப்படும்
பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு-
முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்-
துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

2

முத்து ஒப்பானை, முளைத்து எழு கற்பக-
வித்து ஒப்பானை, விளக்கு இடை நேர் ஒளி
ஒத்து ஒப்பானை, ஒளிர் பவளத்திரள்-
தொத்து ஒப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.

3

பண் ஒத்தானை, பவளம் திரண்டது ஓர்
வண்ணத்தானை, வகை உணர்வான் தனை,
எண்ணத்தானை, இளம்பிறை போல் வெள்ளைச்-
சுண்ணத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

4

விடலையானை, விரை கமழ் தேன் கொன்றைப்-
படலையானை, பலி திரிவான் செலும்
நடலையானை, நரி பிரியாதது ஓர்
சுடலையானை-கண்டீர்-தொழல்பாலதே.

5

பரிதியானை, பல்வேறு சமயங்கள்
கருதியானை, கண்டார் மனம் மேவிய
பிரிதியானை, பிறர் அறியாதது ஓர்
சுருதியானை-கண்டீர்-தொழல்பாலதே.

6

ஆதியானை, அமரர் தொழப்படும்
நீதியானை, நியம நெறிகளை
ஓதியானை, உணர்தற்கு அரியது ஓர்
சோதியானை-கண்டீர்-தொழல்பாலதே.

7

ஞாலத்தானை, நல்லானை, வல்லார் தொழும்
கோலத்தானை, குணப்பெருங்குன்றினை,
மூலத்தானை, முதல்வனை, மூ இலைச்-
சூலத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

8

ஆதிப்பால் அட்டமூர்த்தியை, ஆன் அஞ்சும்
வேதிப்பானை, நம்மேல் வினை வெந்து அறச்
சாதிப்பானை, தவத்து இடை மாற்றங்கள்
சோதிப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.

9

நீற்றினானை, நிகர் இல் வெண்கோவணக்-
கீற்றினானை, கிளர் ஒளிச் செஞ்சடை
ஆற்றினானை, அமரர்தம் ஆர் உயிர்
தோற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.

10

விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள்
கட்டிட்டானை; கனங்குழைபால் அன்பு-
பட்டிட்டானை; பகைத்தவர் முப்புரம்
சுட்டிட்டானை-கண்டீர்-தொழல்பாலதே.

11

முற்றினானை; இராவணன் நீள் முடி
ஒற்றினானை, ஒருவிரலால் உற;
பற்றினானை, ஓர் வெண்தலை; பாம்பு அரைச்
சுற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்;
நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்;
சொக்கு அணைந்த சுடர் ஒளிவண்ணனை
மிக்குக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

2

அலரும் நீரும் கொண்டு ஆட்டித் தெளிந்திலர்;
திலகம் மண்டலம் தீட்டித் திரிந்திலர்;
உலகமூர்த்தி, ஒளிநிற-வண்ணனைச்
செலவு காணல் உற்றார்-அங்கு இருவரே.

3

ஆப்பி நீரோடு அலகு கைக் கொண்டிலர்;
பூப் பெய் கூடை புனைந்து சுமந்திலர்;
காப்புக் கொள்ளி, கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

4

நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்;
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்;
ஐயன், வெய்ய அழல் நிற-வண்ணனை
மெய்யைக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

5

எருக்கு அம் கண்ணிகொண்டு இண்டை புனைந்திலர்;
பெருக்கக் கோவணம் பீறி உடுத்திலர்;
தருக்கினால் சென்று, தாழ்சடை அண்ணலை
நெருக்கி, காணல் உற்றார்-அங்கு இருவரே.

6

மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்;
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்;
உரம் பொருந்தி, ஒளிநிற-வண்ணனை
நிரம்பக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

7

கட்டுவாங்கம் கபாலம் கைக் கொண்டிலர்;
அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர்;
சிட்டன் சேவடி சென்று எய்திக் காணிய,
பட்ட கட்டம் உற்றார்-அங்கு இருவரே.

8

வெந்த நீறு விளங்க அணிந்திலர்;
கந்தமாமலர் இண்டை புனைந்திலர்;
எந்தை, ஏறு உகந்து ஏறு எரிவண்ணனை,
அந்தம் காணல் உற்றார்-அங்கு இருவரே.

9

இள எழுந்த இருங்குவளை(ம்) மலர்
பிளவு செய்து, பிணைத்து அடி இட்டிலர்;
களவு செய் தொழில் காமனைக் காய்ந்தவன்
அளவு காணல் உற்றார்-அங்கு இருவரே.

10

கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்;
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்;
அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக்
கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

11

செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்;
இங்கு உற்றேன்! என்று இலிங்கத்தே தோன்றினான்,
பொங்கு செஞ்சடைப் புண்ணியமூர்த்தியே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம்,
மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை
நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல்
என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!

2

முக்கணும்(ம்) உடையாய்! முனிகள் பலர்
தொக்கு எணும் கழலாய்! ஒரு தோலினோடு
அக்கு அணும்(ம்) அரையாய்! அருளே அலாது
எக்கணும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!

3

பனிஆய் வெண்கதிர் பாய் படர் புன்சடை
முனியாய்! நீ உலகம் முழுது ஆளினும்,
தனியாய், நீ; சரண், நீ;சலமே பெரிது;
இனியாய், நீ எனக்கு; எந்தைபிரானிரே!

4

மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு
உறையும் ஆயினை; கோள் அரவோடு ஒரு
பிறையும் சூடினை; என்பது அலால், பிறிது
இறையும் சொல் இலை-எந்தைபிரானிரே!

5

பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள்
ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய
கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது
ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே!

6

பைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு-
மைம் மால் கண்ணியோடு-ஏறும் மைந்தா! எனும்
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன்
எம்மாலும்(ம்) இலன் எந்தைபிரானிரே!

7

வெப்பத்தின் மன மாசு விளக்கிய
செப்பத்தால், சிவன்! என்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது
எப்பற்றும்(ம்) இலன் எந்தைபிரானிரே!

8

திகழும் சூழ் சுடர் வானொடு, வைகலும்,
நிகழும் ஒண் பொருள் ஆயின, நீதி, என்
புகழும் ஆறும் அலால், நுன பொன் அடி
இகழும் ஆறு இலன் எந்தைபிரானிரே!

9

கைப்பற்றித் திருமால் பிரமன்(ன்) உனை
எய்ப் பற்றி(ய்) அறிதற்கு அரியாய்! அருள்
அப் பற்று அல்லது, மற்று அடிநாயினேன்
எப்பற்றும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!

10

எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம்,
எந்தை, எம்பிரான் என்று இறைஞ்சித் தொழுது,
எந்தை, எம்பிரான் என்று அடி ஏத்துவார்,
எந்தை, எம்பிரான் என்று அடி சேர்வரே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி
முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி
வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.

2

அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர்
உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம்,
வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.

3

ஆதி ஆயவன், ஆரும் இலாதவன்,
போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன்
பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்-
சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.

4

இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி ஊர்
பட்டி துட்டங்கனாய்ப்-பலி தேர்வது ஓர்
கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர்,
அட்டமூர்த்தி, அருள்! என்று அடைவரே.

5

ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்-
நீறு பூசி நிலாமதி சூடிலும்,
வீறு இலாதன செய்யினும், விண்ணவர்,
ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.

6

உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப்
பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம்
பிச்சையே புகும் ஆகிலும், வானவர்,
அச்சம் தீர்த்து அருளாய்! என்று அடைவரே.

7

ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர்
பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா!
கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி
சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.

8

எந்தையே! எம்பிரானே! என உள்கிச்
சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்;
வெந்தநீறு மெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார், அடைந்தார்களே.

9

ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில்
ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்;
தான் அவ்(வ்)வண்ணத்தன் ஆகிலும்; தன்னையே
வான நாடர் வணங்குவர், வைகலே.

10

ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய
மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.

11

ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்;
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்;
அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல்
பரவுவார் அவர் பாவம் பறையுமே.

12

ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்,
நாதனே, அருளாய்! என்று நாள்தொறும்
காதல் செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

13

ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்;
வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ!
மௌவல் நீள் மலர்மேல் உறைவானொடு
பௌவ வண்ணனும் ஆய்ப் பணிவார்களே.

14

அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல்
புக்கு, பல்பலி தேரும் புராணனை-
நக்கு, நீர்கள், நரகம் புகேன்மினோ!-
தொக்க வானவரால்-தொழுவானையே.

15

கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன்
திங்கள் சூடிய தீநிற-வண்ணனார்;
இங்கணார், எழில் வானம் வணங்கவே;
அம் கணாற்கு அதுவால், அவன் தன்மையே!

16

ஙகர வெல் கொடியானொடு,-நன்நெஞ்சே!-
நுகர, நீ உனைக் கொண்டு உய்ப் போக்கு உறில்,
மகர வெல் கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே.

17

சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின்,
மரணம் எய்தியபின், நவை நீக்குவான்
அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?

18

ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம்
சிவன் என்பான்; செழு மான்மறிக் கையினான்;
கவனம் செய்யும் கன விடைஊர்தியான்
தமர் என்றாலும், கெடும், தடுமாற்றமே.

19

இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்;
அடவி காதலித்து ஆடுவர்; ஐந்தலைப்
பட அம்பாம்பு அரை ஆர்த்த பரமனை,
கடவிராய்ச் சென்று, கைதொழுது உய்ம்மினே!

20

இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும்,
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன்
அணைந்த, அம் சடையான் அவன் பாதமே
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே.

21

தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும்
கருமம் தான் கருமான்மறிக் கையினான்;
அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!-
சிரமம் சேர் அழல்-தீவினையாளரே!

22

நமச்சிவாய என்பார் உளரேல், அவர்-
தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால்,
அமைத்துக் கொண்டது ஓர் வாழ்க்கையன் ஆகிலும்,
இமைத்து நிற்பது சால அரியதே.

23

பல்பல் காலம் பயிற்றி, பரமனைச்
சொல் பல்-காலம் நின்று, ஏத்துமின்! தொல்வினை
வெற்பில்-தோன்றிய வெங்கதிர் கண்ட அப்
புல்பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.

24

மணி செய் கண்டத்து, மான்மறிக் கையினான்;
கணிசெய் வேடத்தர் ஆயவர்; காப்பினால்
பணிகள்தாம் செய வல்லவர் யாவர், தம்
பிணி செய் ஆக்கையை நீக்குவர்; பேயரே!

25

இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர்,
நயக்க நின்றவன்; நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்த, வல் மால் எரி ஆயினான்;
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே.

26

அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு,
குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல்
கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?

27

அழல் அங்கையினன்; அந்தரத்து ஓங்கி நின்று
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான்
தழலும் தாமரையானொடு, தாவினான்,
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.

28

இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார்,
வளமை போய், பிணியோடு வருதலால்,
உளமெலாம் ஒளி ஆய் மதி ஆயினான்
கிளமையே கிளை ஆக நினைப்பனே.

29

தன்னில்-தன்னை அறியும் தலைமகன்
தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்;
தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில்,
தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.

30

இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று
அலங்கலோடு உடனே செல ஊன்றிய
நலம் கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும்
வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை
ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை;
தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர்
ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

2

பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தையை, தழல் போல்வது ஓர் மேனியை,
சிந்தையை, தெளிவை, தெளி வாய்த்தது ஓர்
எந்தையை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

3

வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்,
கள்ளத்தைக் கழிய(ம்) மனம் ஒன்றி நின்று
உள்ளத்தில், ஒளியைக் கண்டது-என் உள்ளமே.

4

அம்மானை, அமுதின் அமுதே! என்று
தம்மானை, தத்துவத்து அடியார் தொழும்
செம் மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள்
எம்மானை, கண்டுகொண்டது, என் உள்ளமே.

5

கூறு ஏறும்(ம்) உமை பாகம் ஓர் பாலராய்,
ஆறு ஏறும் சடைமேல் பிறை சூடுவர்,
பாறு ஏறும் தலை ஏந்திப் பல இலம்
ஏறு ஏறும் எந்தையைக் கண்டது-என் உள்ளமே.

6

முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்,
தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்;
வன் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் வல்லிரே?
என் நெஞ்சில் ஈசனைக் கண்டது-என் உள்ளமே.

7

வென்றானை, புலன் ஐந்தும்; என் தீவினை
கொன்றானை; குணத்தாலே வணங்கிட
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்
ஒன்றானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

8

மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும்
குருவினை, குணத்தாலே வணங்கிடும்
திருவினை, சிந்தையுள் சிவனாய் நின்ற
உருவனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

9

தேசனை, திருமால் பிரமன் செயும்
பூசனை, புணரில் புணர்வு ஆயது ஓர்
நேசனை, நெஞ்சினுள் நிறைவு ஆய் நின்ற
ஈசனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

10

வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை
அறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக்
கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால்
ஒறுத்தானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!
காவலாளன் கலந்து அருள்செய்யுமே.

2

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஒங்கு மாகடல் ஓதம் நீராடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

3

பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்?
இட்டும் அட்டியும் ஈதொழில் பூணின் என்?
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்?
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

4

வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்?
நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என்?
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே.

5

காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்?
வேலை தோறும் விதிவழி நிற்கில் என்?
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்?
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

6

கானம், நாடு, கலந்து திரியில் என்?
ஈனம் இன்றி இருந் தவம் செய்யில் என்?
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்?
ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே.

7

கூட வேடத்தர் ஆகிக் குழுவில் என்?
வாடி ஊனை வருத்தித் திரியில் என்?
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனைப்
பாடலாளர்க்கு அல்லால், பயன் இல்லையே.

8

நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்?
குன்றம் ஏறி இருந் தவம் செய்யில் என்?
சென்று நீரில் குளித்துத் திரியில் என்?
என்றும், ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

9

கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை-
ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்,
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே.

10

மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்?
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக்
குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி
பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பொது
வ.எண் பாடல்
1

வேத நாயகன்; வேதியர் நாயகன்;
மாதின் நாயகன்; மாதவர் நாயகன்;
ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்;
பூதநாயகன் புண்ணியமூர்த்தியே.

2

செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ,
அத்தன் என்று அரியோடு பிரமனும்
துத்தியம் செய நின்ற நல்சோதியே?

3

நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.

4

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும், ஏழைகாள்!
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம்
மாதேவன்(ன்) அலால் தேவர் மற்று இல்லையே.

5

கூவல் ஆமை குரைகடல் ஆமையை,
கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல்,
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே.

6

பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு
ஈவனை, இமையோர் முடி தன் அடிச்
சாய்வனை,-சலவார்கள்-தமக்கு உடல்
சீவனை, சிவனை, சிந்தியார்களே.

7

எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்;
அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம் அது ஆகுவர், நாடரே.

8

அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்;
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?
இருக்கு நால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார், கல்மனவரே.

9

தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்-
ஆய உள்ளத்து அமுது அருந்தப் பெறார்-
பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.

10

அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்-
கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே.