பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅதிகைவீரட்டானம்
வ.எண் பாடல்
1

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

2

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்; நினையாது ஒருபோதும் இருந்து அடியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கிட,
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
“அஞ்சேலும்!” என்னீர்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

3

பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்! படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால், சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளி
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்! பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மனே!

4

முன்னம், அடியேன் அறியாமையினான் முனிந்து, என்னை நலிந்து முடக்கியிட,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்; சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீ
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ, தலைஆயவர் அம் கடன் ஆவதுதான்?
அன்னம் நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

5

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால், கரை நின்றவர், “கண்டுகொள்!” என்று சொல்லி,
நீத்து ஆய கயம் புக நூக்கியிட, நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்-புனல் ஆர் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

6

சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்; தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்; உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்! உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

7

உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும், ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால், வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீ
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

8

வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன், வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை; சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்! கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

9

பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்! புரி புன் சடையீர்! மெலியும் பிறை
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார், அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

10

போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்! புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ் அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால், என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅதிகைவீரட்டானம்
வ.எண் பாடல்
1

சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

2

பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள,
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண் நூலும்,
காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,
ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

3

ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும்,
முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூ இலை வேலும்,
சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை

4

மடமான் மறி, பொன் கலையும், மழு, பாம்பு, ஒரு கையில் வீணை,
குடமால் வரைய திண் தோளும், குனி சிலைக் கூத்தின் பயில்வும்,
இடம் மால் தழுவிய பாகம், இரு நிலன் ஏற்ற சுவடும்,
தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

5

பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்,
வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாயமலையும்,
நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவதும் இல்லை.

6

கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும்,
பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும்,
அரங்கு இடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும்,
நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

7

கொலை வரி வேங்கை அதளும், குலவோடு இலங்கு பொன் தோடும்,
விலை பெறு சங்கக் குழையும், விலை இல் கபாலக் கலனும்,
மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும்,
உலவு கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

8

ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும்,
பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரம் கொள் கருவி
நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

9

சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும்,
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற
வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

10

நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற,
வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடிலப்புனலும் உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅதிகைவீரட்டானம்
வ.எண் பாடல்
1

முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, வெள்ள நீர்
வளைத்து எழு சடையினர்; மழலை வீணையர்;
திளைத்தது ஓர் மான் மறிக் கையர்-செய்ய பொன்
கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே.

2

ஏறினர், ஏறினை; ஏழை தன் ஒரு-
கூறினர்; கூறினர், வேதம்; அங்கமும்
ஆறினர்; ஆறு இடு சடையர்; பக்கமும்
கீறின உடையினர்-கெடில வாணரே.

3

விடம் திகழ் கெழு தரு மிடற்றர்; வெள்ளை நீறு
உடம்பு அழகு எழுதுவர்-முழுதும் வெண் நிலாப்
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய்புனல்
கிடந்து அழகு எழுதிய கெடில வாணரே.

4

விழும் மணி அயில் எயிற்று அம்பு, வெய்யது ஓர்
கொழு மணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழு மணிமிடற்றினர்; செய்யர்; வெய்யது ஓர்
கெழு மணி அரவினர்-கெடில வாணரே.

5

குழுவினர் தொழுது எழும் அடியர்மேல் வினை
தழுவின கழுவுவர், பவள மேனியர்,
மழுவினர், மான் மறிக் கையர், மங்கையைக்
கெழுவின யோகினர்-கெடில வாணரே.

6

அங்கையில் அனல்-எரி ஏந்தி, ஆறு எனும்
மங்கையைச் சடை இடை மணப்பர்; மால்வரை-
நங்கையைப் பாகமும் நயப்பர்-தென் திசைக்
கெங்கை அது எனப்படும் கெடில வாணரே.

7

கழிந்தவர் தலை கலன் ஏந்தி, காடு உறைந்து
“இழிந்தவர் ஒருவர்!” என்று எள்க, வாழ்பவர்-
வழிந்து இழி மதுகரம் மிழற்ற, மந்திகள்
கிழிந்த தேன் நுகர் தரும் கெடில வாணரே

8

கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேது உற,
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற,
கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே,
கிடந்து தான் நகுதலைக் கெடில வாணரே.

9

வெறி உறு விரிசடை புரள வீசி, ஓர்
பொறி உறு புலி உரி அரையது ஆகவும்,
நெறி உறு குழல் உமை பாகம் ஆகவும்,
கிறி பட உழிதர்வர்-கெடில வாணரே!

10

பூண்ட தேர் அரக்கனை, பொரு இல் மால்வரைத்
தூண்டு தோள் அவை பட, அடர்த்த தாளினார்
ஈண்டு நீர்க் கமலவாய், மேதி பாய் தர,
கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவதிகைவீரட்டானம்
வ.எண் பாடல்
1

இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன் சொல் காரிகை பாகம் ஆக,
சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையில் ஏற்ற,
அரும்பு கொப்பளித்த சென்னி, அதிகை வீரட்டனாரே.

2

கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி,
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து,
செம்பு கொப்பளித்த மூன்று மதில் உடன் சுருங்க, வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார்-அதிகைவீரட்டனாரே

3

விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த,
சடையும் கொப்பளித்த திங்கள், சாந்தம் வெண் நீறு பூசி,
உடையும் கொப்பளித்த நாகம், உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும் கொப்பளித்த சீரார்-அதிகை வீரட்டனாரே.

4

கறையும் கொப்பளித்த கண்டர்; காமவேள் உருவம் மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர்-வண்டு பண் பாடும் கொன்றை
அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.

5

நீறு கொப்பளித்த மார்பர்-நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி,
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர் பாகம்,
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த,
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.

6

வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த,
பிணங்கு கொப்பளித்த சென்னிச் சடை உடைப் பெருமை அண்ணல்-
சுணங்கு கொப்பளித்த கொங்கைச் சுரி குழல் பாகம் ஆக,
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே.

7

சூலம் கொப்பளித்த கையர்; சுடர்விடு மழுவாள் வீசி,
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி,
மாலும் கொப்பளித்த பாகர்-வண்டு பண் பாடும் கொன்றை,
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே.

8

நாகம் கொப்பளித்த கையர்; நால்மறை ஆய பாடி
மேகம் கொப்பளித்த திங்கள் விரிசடைமேலும் வைத்து,
பாகம் கொப்பளித்த மாதர் பண் உடன் பாடி ஆட,
ஆகம் கொப்பளித்த தோளார்-அதிகைவீரட்டனாரே.

9

பரவு கொப்பளித்த பாடல் பண் உடன் பத்தர் ஏத்த,
விரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து(வ்),
இரவு கொப்பளித்த கண்டர்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர்-அதிகைவீரட்டனாரே.

10

தொண்டை கொப்பளித்த செவ்வாய், துடி இடை, பரவைஅல்குல்,
கொண்டை கொப்பளித்த கோதை, கோல்வளை பாகம் ஆக-
வண்டு கொப்பளித்த தீம்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டை கொப்பளித்த தெண் நீர்க் கெடில வீரட்டனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவதிகை வீரட்டானம்
வ.எண் பாடல்
1

வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்)
உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,
விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே.

2

பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம்
கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை
சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு-
ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே.

3

ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று(வ்)
ஆனையின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.

4

துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று,
“விருத்தி தான் தருக!” என்று வேதனை பலவும் செய்ய,
வருத்தியால்; வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும்-அதிகை வீரட்டனாரே.

5

பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்
துத்திஐந்தலையநாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து (வ்),
உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று(வ்)
அத்தியின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.

6

வரிமுரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும், -நெஞ்சே!-
கரி உரி மூடவல்ல கடவுளைக் காலத்தாலே;
சுரிபுரிவிரிகுழ(ல்) லாள், துடி இடைப் பரவை அல்குல்
அரிவை, ஒர் பாகர்போலும்- அதிகை வீரட்டனாரே.

7

நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக;
பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை,
சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே.

8

எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.

9

ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்,
வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்;
நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று
அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே.

10

தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார், திருவிரல்தான்; முருகு அமர்கோதை பாகத்து
அடக்கினார்-என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவதிகை வீரட்டானம்
வ.எண் பாடல்
1

“நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி!
பங்கனே! பரமயோகி!” என்று என்றே பரவி நாளும்,
செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான்,
அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

2

பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன்; வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்
செய்யதாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்,
ஐய! நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

3

நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்;
ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்;
சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான்,
ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

4

தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம் என்னும்
பொருளுளே அழுந்தி, நாளும், போவது ஓர் நெறியும் காணேன்;
இருளும் மா மணிகண்டா! நின் இணை அடி இரண்டும் காண்பான்
அருளும் ஆறு அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!

5

அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப்பட்டு, இங்கு உழிதரும் ஆதனேனை,
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே!

6

உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி,
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்;
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே!

7

கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்;
அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே!

8

மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி,
ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்;
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே!

9

பிணி விடா ஆக்கை பெற்றேன்; பெற்றம் ஒன்று ஏறுவானே!
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்;
துணிவு இலேன்; யன் அல்லேன்; தூ மலர்ப்பாதம் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே!

10

திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும்,
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா
ஒருவனே! எம்பிரானே! உன் திருப்பாதம் கண்பான்,
அருவனே! அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவதிகை வீரட்டானம்
வ.எண் பாடல்
1

மடக்கினார்; புலியின்தோலை; மா மணி நாகம் கச்சா
முடக்கினார்; முகிழ் வெண்திங்கள் மொய்சடைக் கற்றை தன் மேல்-
தொடக்கினார்; தொண்டைச் செவ்வாய்த் துடி இடைப் பரவை அல்குல்
அடக்கினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே.

2

சூடினார், கங்கையாளை; சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள், நங்கையாளும்; ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார், சாமவேதம்; பாடிய பாணியாலே
ஆடினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே.

3

கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார்- கெடில வேலி அதிகைவீரட்டனாரே.

4

மறி படக் கிடந்த கையர், வளர் இள மங்கை பாகம்
செறி படக் கிடந்த செக்கர்ச் செழு மதிக்கொழுந்து சூடி,
பொறி படக் கிடந்த நாகம் புகை உமிழ்ந்துஅழல வீக்கி,
கிறிபட நடப்பர்போலும்-கெடில வீரட்டனாரே.

5

நரி வரால் கவ்வச் சென்று நல்-தசை இழந்தது ஒத்த,
தெரிவரால்,-மால் கொள் சிந்தை,-தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார்
வரி வரால் உகளும் தெண் நீர்க் கழனி சூழ் பழன வேலி,
அரிவரால் வயல்கள் சூழ்ந்த, அதிகைவீரட்டனாரே.

6

புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய், பலா சங்க்கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண் நீறு அணிந்தவர்-மணி வெள் ஏற்றுத்
துள்ளலைப் பாகன் தன்னைத் தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை
அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே.

7

நீறு இட்ட நுதலர்; வேலை நீலம் சேர் கண்டர்; மாதர்
கூறு இட்ட மெய்யர் ஆகி, கூறினார், ஆறும் நான்கும்;
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையினுள்ளால்
ஆறு இட்டு முடிப்பர்போலும்-அதிகைவீரட்டனாரே.

8

காண் இலார் கருத்தில் வாரார்; திருத்தலார்; பொருத்தல் ஆகாா
ஏண் இலார்; இறப்பும் இல்லார்; பிறப்பு இலார்; துறக்கல் ஆகார்
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்
ஆண் அலார்; பெண்ணும் அல்லார்-அதிகைவீரட்டனாரே.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செரு வலி அரக்கன் சென்று
பேர்த்தலும், பேதை அஞ்ச, பெருவிரல் அதனை ஊன்றி,
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து, அவனை அன்று(வ்)
ஆர்த்த வாய் அலற வைத்தார்-அதிகைவீரட்டனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவதிகைவீரட்டானம்
வ.எண் பாடல்
1

முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி,
கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி,
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்;
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே!

2

கறைப் பெருங் கண்டத்தானே! காய் கதிர் நமனை அஞ்சி
நிறைப் பெருங்கடலைக் கண்டேன்! நீள்வரை உச்சி கண்டேன்!
பிறைப் பெருஞ் சென்னியானே! பிஞ்ஞகா! இவை அனைத்தும்
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே!

3

“நாதனார்” என்ன, நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார், “இணை அடி தொழுதோம்” என்பார்
ஆதன் ஆனவன் என்றுஎள்கி,- அதிகைவீரட்டனே!-நின்
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே.

4

சுடலை சேர் சுண்ண மெய்யர்; சுரும்பு உண விரிந்த கொன்றைப்-
படலை சேர் அலங்கல் மார்பர்-பழனம் சேர் கழனித் தெங்கின்
மடலை நீர் கிழிய ஓடி அதன் இடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்டம் மேய கிளர் சடைமுடியனாரே

5

மந்திரம் உள்ளது ஆக, மறி கடல் எழு நெய் ஆக,
இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்
சிந்திரம் ஆக நோக்கிக் தெருட்டுவார்-தெருட்ட வந்து
கந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே

6

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி,
மெய்ஞ் ஞரம்பு உதிரம் பில்க, விசை தணிந்து, அரக்கன் வீழ்ந்து,
கைஞ் ஞரம்பு எழுவிக் கொண்டு, காதலால் இனிது சொன்ன
கின்னரம் கேட்டு உகந்தார்-கெடில வீரட்டனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅதிகைவீரட்டானம்
வ.எண் பாடல்
1

மாசு இல் ஒள்வாள் போல் மறியும் மணி நீர்த் திரைத் தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கல் உற்றால்,
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு,
வீசும் கெடில வடகரைத்தே-எந்தை வீரட்டமே.

2

பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப, அருகு உலவும்
செங்கால் குருகு இவை சேரும் செறி கெடிலக் கரைத்தே-
வெங் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே.

3

அம் மலர்க் கண்ணியர் அஞ்சனம்,- செந்துவர்வாய் இளையார்-
வெம் முலைச் சாந்தம், விலை பெறு மாலை, எடுத்தவர்கள்,
தம் மருங்கிற்கு இரங்கார், தடந் தோள் மெலியக் குடைவார்
விம்மு புனல் கெடிலக் கரைத்தே-எந்தை வீரட்டமே.

4

மீன் உடைத் தண்புனல் வீரட்டரே! நும்மை வேண்டுகின்றது
யான் உடைச் சில்குறை ஒன்று உளதால்; நறுந்தண் எருக்கின்
தேன் உடைக் கொன்றைச் சடை உடைக் கங்கைத் திரை தவழும்
கூன் உடைத் திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்மினே!

5

ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம் அகவன் திரிந்து,
வேர் அட்ட, நிற்பித்திடுகின்றதால்-விரிநீர்ப் பரவைச்
சூர் அட்ட வேலவன் தாதையை, சூழ் வயல் ஆர் அதிகை-
வீரட்டத்தானை, விரும்பா அரும்பாவவேதனையே.

6

படர் பொன்சடையும், பகுவாய் அரவும், பனிமதியும்,
சுடலைப் பொடியும், எல்லாம் உளவே; அவர் தூய தெண் நீர்க்
கெடிலக் கரைத் திரு வீரட்டர் ஆவர்; கெட்டேன்! அடைந்தார்
நடலைக்கு நல்-துணை ஆகும்கண்டீர், அவர் நாமங்களே.

7

காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகிக் கண் ஆர் கெடில
நாள் அங்கடிக்கு ஓர் நகரமும், மாதிற்கு நன்கு இசைந்த
தாளங்கள் கொண்டும், குழல் கொண்டும், யாழ் கொண்டும், தாம் அங்ஙனே
வேடங்கள் கொண்டும், விசும்பு செல்வார் அவர்-வீரட்டரே.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.